செய்திகள்

இந்து மதம் பாஜகவுக்கு மட்டும் சொந்தமானது அல்ல - மு.க.ஸ்டாலின் காட்டம்

Published On 2019-04-09 06:24 GMT   |   Update On 2019-04-09 06:24 GMT
திருநெல்வேலியில் நடைபெற்ற பிரசாரப்பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு பேசிய மு.க.ஸ்டாலின், இந்து மதம் பாஜகவுக்கு மட்டும் சொந்தமானது அல்ல என கூறியுள்ளார். #MKStalin #DMK #LoksabhaElections2019
திருநெல்வேலி:

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று திருநெல்வேலியின் பாளையங்கோட்டை பகுதியில் பெல் திடலில்  நடைபெற்ற பிரசாரப்பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு, பாராளுமன்ற தேர்தலின் திமுக வேட்பாளர் ஞானதிரவியத்தை ஆதரித்து  பேசியதாவது:



மத்தியில் அமைந்திருக்கும் பாஜக அரசின் ஆட்சியும், மாநிலத்திலே ஆளும் அதிமுக அரசின் செயல்பாடுகளும் மக்களுக்கு எந்த அளவிற்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்பதை தினமும் பார்க்கிறேன். அவர்கள் ஆட்சியிலே செய்த சாதனையை கூறாமல் தொடர்ந்து எங்களையே குற்றம் சாட்டிக் கொண்டிருக்கிறார்கள்.  ஏதேனும் நல்லது செய்திருந்தால் தானே சொல்லமுடியும்? மோடி தலைமையிலான பாசிச ஆட்சி முடிவுக்கு வர வேண்டும்.

மத்தியில் ஆளும் பாஜக , திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி என தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.  இந்து மதம் என்பது பாஜகவுக்கு மட்டும் சொந்தமானது அல்ல. கலைஞர் ஆட்சியிலே எத்தனையோ வசதிகள், சலுகைகள், நலத்திட்டங்கள் அறநிலையத்துறைக்கும்,இந்து மதத்தினருக்கும் செய்யப்பட்டுள்ளது. பூசாரிகளுக்கு ஓய்வூதியம், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என கூறியது, கோவில்களில் அதிக அளவில் குடமுழுக்கு நடத்தியது, கோவில்களில் இலவச திருமணங்கள் ஆகியன கழக ஆட்சியில் தான்.

திமுக மீது அவதூறு பரப்புவதே பாஜகவின் செயல். திமுக எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல.  திமுக பாஜகவை எதிர்ப்பதால், இந்து மதத்தை எதிர்ப்பது என்பது ஆகாது. மோடி ஆட்சியினை அப்புறப்படுத்திய சில மணிநேரத்திலேயே, ஆளும் கட்சியின் ஆட்சி கலையும். நாட்டில் நல்ல ஆட்சி மலர மக்கள் துணை நிற்க வேண்டும்.  எடப்பாடியின் உதவாக்கரை ஆட்சியையும், மோடியின் சர்வாதிகார ஆட்சியையும் நீங்கள் கவிழ்க்க தயாராகி விட்டீர்கள். வரும் 18ம் தேதி முக்கிய பங்கு ஆற்றவிருக்கும் நீங்கள், மறக்காமல் செய்து விடுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார். #MKStalin #DMK #LoksabhaElections2019 
Tags:    

Similar News