ஆரத்தி எடுக்கும் போது பணம் கொடுப்பது தவறு - கமல்ஹாசன்
ஆலந்தூர:
மக்கள் நீதி மய்யத் தலைவர் கமலஹாசன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
கோவையில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமையில் கொலை செய்யப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூற செல்கிறேன்.
பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதை தடுக்க அழுத்தமான அரசு வேண்டும். இதனை கட்டுப்படுத்த காவல் துறைக்கு முழுமையான அதிகாரம் அளிக்க வேண்டும். தேர்தல் பிரசாரத்தில் மக்களை சந்திக்கும் போது சந்தோசமாக இருக்கின்றது.
தீர்ப்பு என்பது மக்கள் கையில் தான் உள்ளது. வேட்பாளர்களுக்கு ஆரத்தி எடுப்பது என்பது நல்ல விஷயம் எனக்கு கூட ஆரத்தி எடுக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு பணம் கொடுப்பது தவறு.
நாங்கள் அதிகாரத்துக்கு வந்தால் பெண்களுக்கென்று முழுமையான தனி காவல் நிலையம் செயல்படும். ஏற்கனவே உழவர் சந்தை என்று ஒன்று உள்ளது. ஆனால் அது முழுமையாக செயல்படவில்லை. மற்ற கட்சிகள் செயல்படுத்தும் நல்ல திட்டங்களை நாங்கள் முன்னெடுத்து செல்வோம்.அதைவிட்டுவிட மாட்டோம்.
தேர்தல் நேரத்தில் பி.எம். மோடி படம் வெளியிட காங்கிரஸ் தடை கேட்டுள்ளது. இது சரியானது தான். தேர்தலில் அந்த கட்சிக்கு இது விளம்பரம் தான்.
இவ்வாறு அவர் கூறினார். #KamalHassan