செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை திட்டக்குடி தாசில்தார் புகழேந்தியிடம் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர்.

திட்டக்குடி அருகே வாகன சோதனையில் ரூ.11 லட்சம் சிக்கியது

Published On 2019-03-12 11:00 GMT   |   Update On 2019-03-12 11:03 GMT
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாததால் ரூ.11 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
பெண்ணாடம்:

தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந் தேதி தேர்தல் நடக்கிறது.

இதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலுக்கு வந்தது. தமிழகம் முழுவதும் வாகனங்களில் பணம் கடத்தப்படுவதை தடுக்க பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்ட 9 சட்டசபை தொகுதிக்கும் தனித்தனியாக பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.

திட்டக்குடி அருகே எழுத்தூரில் இன்று அதிகாலை சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பறக்கும்படையை சேர்ந்த முகமதுஅசேன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் ஆகியோர் அந்த வழியாக சென்ற வாகனங்களை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அந்த வழியாக ஸ்ரீரங்கத்தில் இருந்து சென்னை நோக்கி கார் ஒன்று வேகமாக வந்தது. உடனே பறக்கும் படையினர் அந்த காரை வழிமறித்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அந்த காருக்குள் கட்டுக்கட்டாக பணம் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மொத்தம் 11 லட்சத்து 63 ஆயிரம் ரூபாய் இருந்தது. உடனே காரை ஓட்டி வந்த ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ராஜேஷ் என்பவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அவர் திருச்சி அருகே சிறுகனூரில் பிளாஸ்டிக் டேங்க் கம்பெனி நடத்தி வருவதாகவும், சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்துக்கு பணத்தை எடுத்து செல்வதாகவும் கூறினார். ஆனால், அந்த பணம் எடுத்து செல்வதற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த பணத்தை திட்டக்குடி தாசில்தார் புகழேந்தியிடம் ஒப்படைத்தனர். அதனை அவர் திட்டக்குடி அரசு கருவூலகத்தில் ஒப்படைத்தார்.
Tags:    

Similar News