செய்திகள்
கீதா

பணப்பட்டுவாடா புகார்- அரவக்குறிச்சி தேர்தலை நிறுத்திய சென்னை பெண்

Published On 2019-03-11 06:44 GMT   |   Update On 2019-03-11 06:44 GMT
பணப்பட்டுவாடா குறித்து சென்னை பெண் தொடர்ந்த வழக்கினால் தான் அரவக்குறிச்சி தேர்தல் நடத்தப்படுவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. #AravakurichiElection
கரூர்:

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுடன், 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் ஏப்ரல் 18-ந்தேதி நடைபெற உள்ளது. இதில் அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய 3 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தல் தொடர்பான வழக்கு ஒன்று கோர்ட்டில் நிலுவையில் உள்ளதால் நிறுத்தி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. சென்னையை சேர்ந்த கீதா என்பவர் தொடர்ந்த வழக்கினால்தான் தேர்தல் நடத்தப்படுவது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வழக்கு தொடர்ந்த கீதா நிருபர்களிடம் கூறியதாவது:-


நான் சென்னை கோடம்பாக்கத்தில் வசிக்கிறேன். தேசிய மக்கள் சக்தி கட்சியின் மாநில மகளிர் அணி தலைவியாக உள்ளேன். அரவக்குறிச்சி சட்டசபை தேர்தல் நடந்த போது அதில் அ.தி.மு.க. சார்பில் செந்தில்பாலாஜியும், தி.மு.க. சார்பில் கே.சி.பழனிசாமியும், போட்டியிட்டனர். பணப்புழக்கம் அதிகம் இருந்தது குறித்து வந்த புகார்களின் அடிப்படையில் அந்த தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் ரத்து செய்யப்பட்டது.

பணப்புழக்கம் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து நான் பொது நல வழக்கை சென்னை கோர்ட்டில் தொடர்ந்தேன். கோர்ட்டு அந்த வழக்கை ஏற்காததோடு எனக்கு அபராதமும் விதித்தது.

தொடர்ந்து மீண்டும் அரவக்குறிச்சி தேர்தல் நடத்த அறிவிப்பு வந்த போது நான் அந்த தேர்தலில் போட்டியிட்டேன். தேர்தலில் செந்தில் பாலாஜி வெற்றி பெற்றார். அதன்பின்னர் நான் அந்த தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் என்ற முறையில் ஏற்கனவே பணப்பட்டுவாடா பிரச்சனையில் தேர்தல் நிறுத்தப்பட்ட நிலையில் மீண்டும் நடந்த தேர்தலில் செந்தில்பாலாஜி, கே.சி. பழனிசாமி ஆகியோரை நிற்க அனுமதித்தது தவறு என்றும், செந்தில் பாலாஜியின் வெற்றி செல்லாது என்றும் வழக்கு தாக்கல் செய்தேன்.

அந்த வழக்கிற்கு செந்தில் பாலாஜி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் தடை ஆணை வாங்கினர். இப்போது அந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இதன் காரணமாகத்தான் அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை.

இவ்வாறு அவர் கூறினார். #AravakurichiElection
Tags:    

Similar News