செய்திகள்

21 சட்டசபை தொகுதிகளை குறி வைக்கும் தினகரன்

Published On 2019-03-01 10:14 GMT   |   Update On 2019-03-01 10:14 GMT
பாராளுமன்ற தொகுதிகளை விட இடைத்தேர்தல் நடைபெறும் சட்டமன்ற தொகுதிகளில் டி.டி.வி.தினகரன் அதிக அக்கறை காட்டி வருகிறார். #AMMK #TTVDhinakaran
சென்னை:

பாராளுமன்ற தேர்தலை சந்திப்பதற்காக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. இத்துடன் தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா, பா.ம.க. இணைந்துள்ளன. தே.மு.தி.க.வையும் சேர்ப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., கம்யூனிஸ்ட்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.

கமல்ஹாசன் தனது மக்கள் நீதிமய்யம் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் என்று அறிவித்துள்ளார். அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தனி அணி அமைக்கப்போவதாக கூறினார். தற்போது, தனியாக தேர்தலை சந்திக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்

அ.ம.மு.க.வுடன் கூட்டணி சேர இருப்பதாக இதுவரை எந்த கட்சிகளும் அறிவிக்கவில்லை.

பா.ம.க.வில் இருந்த நடிகர் ரஞ்சித் சமீபத்தில் அதில் இருந்து விலகி தினகரன் கட்சியில் சேர்ந்து இருக்கிறார். அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பதில் தீவிரமாக இருக்கின்றன.

இந்த நிலையில், தினகரன் ஒவ்வொரு தொகுதியாக சென்று தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். பாராளுமன்ற தொகுதிகளை விட இடைத்தேர்தல் நடைபெறும் சட்டமன்ற தொகுதிகளில் அதிக அக்கறை காட்டி வருகிறார்.

இடைத்தேர்தல் நடைபெறும் 21 தொகுதிகளில், தினகரன் ஆதரவாளர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் 18 தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் 10-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறும் நோக்கத்தில் தனது கட்சி நிர்வாகிகளை தினகரன் களம் இறங்கியுள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில், 9 தொகுதிகளில் வெற்றி பெற்றால் தான் அ.தி.மு.க. ஆட்சி நீடிக்கும். எனவே, தனது கட்சி 10 தொகுதிகளில் வெற்றி பெற்றால் தனது ஆதரவு இல்லாமல் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது. எனவே, அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று கருதுகிறார். எனவே, 21 தொகுதிகளிலும் தினகரன் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.

பாராளுமன்ற தேர்தலில் அதிக ஓட்டுகள் பெற வேண்டும். சட்டசபை தொகுதிகளில்தான் முழு கவனமும் இருக்க வேண்டும் என்று தினகரன் தனது கட்சியினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதை அறிந்த அ.தி.மு.க. தலைமையும் 21 சட்டசபை தொகுதிகளிலும் முழு கவனம் செலுத்த அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. #AMMK #TTVDhinakaran
Tags:    

Similar News