திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக புதுவை பா.ஜ.க. எம்.எல்.ஏ. மீது சென்னை பெண் புகார்
- பாதிக்கப்பட்ட எல்லம்மாள் கடந்த 2018-ம் ஆண்டு சென்னை மகளிர் ஆணையத்தில் கல்யாணசுந்தரம் மீது புகார் அளித்துள்ளார்.
- பா.ஜனதா எம்.எல்.ஏ.வாக உள்ள கல்யாணசுந்தரம் கடந்த 2012-ம் ஆண்டில் என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் கல்வித்துறை அமைச்சராக இருந்தார்.
புதுச்சேரி:
புதுவை காலாப்பட்டு தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம். இவர் கடந்த 2008-ம் ஆண்டு சென்னை ராமாபுரத்தை சேர்ந்த எல்லம்மாள் என்ற பெண்ணை காதலித்து சென்னை வடபழனி முருகன் கோவிலில் திருமணம் செய்துள்ளார்.
திருமணமான சில மாதங்களில் எல்லம்மாளுக்கு பெண் குழந்தை பிறந்து தனது தாய் வீட்டில் இருந்தார். அப்போது, கல்யாணசுந்தரம் வேறொரு பெண்ணை 2-வது திருமணம் செய்துள்ளார்.
நாட்கள் நகர நகர சில ஆண்டுகள் கழித்து இந்த உண்மை எல்லம்மாளுக்கு தெரியவந்தது. இதனால் கோபமடைந்து கல்யாணசுந்தரத்திடம் அவர் கேட்டுள்ளார். அப்போது எல்லம்மாளை கல்யாணசுந்தரம் சமாதானப்படுத்தி புதுவை கோரிமேட்டில் குடி வைத்துள்ளார்.
பின்னர் இருவரும் சிறிது காலம் ஒன்றாக வாழ்ந்துள்ளனர். இந்த சூழலில் எல்லம்மாள் 2-வது முறையாக கர்ப்பமடைந்து ஆண் குழந்தை பெற்றுள்ளார்.
இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கல்யாணசுந்தரம் தனது 2-வது மனைவியின் பேச்சை கேட்டு, எல்லம்மாள் மற்றும் அவரது 2 குழந்தைகளை சரிவர கவனிக்காமல் வீட்டுக்கு வருவதை தவிர்த்துள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்ட எல்லம்மாள் கடந்த 2018-ம் ஆண்டு சென்னை மகளிர் ஆணையத்தில் கல்யாணசுந்தரம் மீது புகார் அளித்துள்ளார். இதையடுத்து எல்லம்மாளை மீண்டும் சமாதானம் செய்த கல்யாணசுந்தரம் எல்லம்மாளுக்கு மாதந்தோறும் வீட்டு செலவுக்கு என்று ரூ.25 ஆயிரம் பணம் தருவதாக கூறினார். அவ்வப்போது வீட்டுக்கு வந்து குழந்தைகளையும் பார்த்து விட்டு சென்றுள்ளார்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கல்யாணசுந்தரம் குடும்ப செலவிற்கு பணம் தராமல் ஏமாற்றி வருவதாகவும் தன்னையும் குழந்தைகளையும் சந்திப்பதை முற்றிலுமாக நிறுத்திவிட்டதாகவும் எல்லம்மாள் புகார் கூறியுள்ளார்.
இதையடுத்து தங்களுக்கு நீதி வேண்டி எல்லம்மாள் கருவடிகுப்பம் பகுதியில் உள்ள கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ. வீட்டு வாசலில் தனது 2 குழந்தைகளுடன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
மேலும் தன்னை ஏமாற்றிய கல்யாணசுந்தரத்தின் மீது நடவடிக்கை எடுக்ககோரி வில்லியனூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திலும் எல்லம்மாள் புகார் அளித்துள்ளார்.
தற்போது பா.ஜனதா எம்.எல்.ஏ.வாக உள்ள கல்யாணசுந்தரம் கடந்த 2012-ம் ஆண்டில் என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் கல்வித்துறை அமைச்சராக இருந்தார். அப்போது, ஆள்மாறாட்டம் செய்து எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை எழுதியதாக எழுந்த புகாரில் அமைச்சர் பதவியை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.