கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்களில் இருந்து வீரபாண்டி அரசு கல்லூரிக்கு கூடுதல் பஸ் இயக்கப்படுமா?
- மாணவ-மாணவிகள் தற்போது இயக்கப்பட்டு வரும் ஒரே பஸ்ஸில் படிக்கட்டுகளில் தொங்கியவரே கல்லூரிக்கு பயணம் செய்து வருகின்றனர்.
- எனவே காலை மற்றும் மாலை நேரங்களில் மயிலாடும்பாறையில் இருந்து வீரபாண்டிக்கு கூடுதலாக அரசு டவுன் பஸ் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை எடுத்துள்ளனர்.
வருசநாடு:
தேனிமாவட்டம் கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் வீரபாண்டி அருகே அரசு கலை அறிவியல் கல்லூரியில் படித்து வருகின்றனர். கல்லூரி மாணவ-மாணவிகளின் வசதிக்காக கடந்த ஆண்டு மயிலாடும்பாறையில் இருந்து வீரபாண்டி கல்லூரி வரை அரசு டவுன் பஸ் சேவை தொடங்கப்பட்டது. இதனால் கல்லூரி மாணவர்கள் எளிதாக பஸ்களில் பயணம் செய்து வந்தனர். இந்நிலையில் இந்த கல்வி ஆண்டு கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்களில் இருந்து கூடுதலாக மாணவர்கள் கல்லூரியில் சேர்ந்துள்ளனர்.
எனவே அரசு சார்பில் இயக்கப்பட்டு வரும் ஒரே ஒரு பஸ் மாணவ-மாணவிகளுக்கு போதுமானதாக இல்லை. மயிலாடும்பாறையில் இருந்து வீரபாண்டிக்கு வேறு பஸ் சேவைகள் எதுவும் இல்லை. வீரபாண்டி கல்லூரிக்கு செல்ல வேண்டும் எனில் தேனிக்கு சென்று அதன் பின்னர் வேறு ஒரு பஸ்ஸில் வீரபாண்டி செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இதனால் மாணவ-மாணவிகள் தற்போது இயக்கப்பட்டு வரும் ஒரே பஸ்ஸில் படிக்கட்டுகளில் தொங்கியவரே கல்லூரிக்கு பயணம் செய்து வருகின்றனர். ஒரு சில நேரங்களில் மாணவிகளும் படிகளில் நின்றவரே பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.
மாணவ-மாணவிகளின் நலன் கருதி காலை மற்றும் மாலை நேரங்களில் மயிலாடும்பாறையில் இருந்து வீரபாண்டிக்கு கூடுதலாக அரசு டவுன் பஸ் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை எடுத்துள்ளனர்.