உள்ளூர் செய்திகள்

தமிழக வாலிபரை வடமாநில தொழிலாளர்கள் விரட்டுவது போல் சித்தரித்து சமூக வலைதளங்களில் வீடியோ- பதிவிட்ட நபர் யார்?

Published On 2023-01-28 11:03 GMT   |   Update On 2023-01-28 11:03 GMT
  • திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள், இளைஞர்கள் திரண்டனர்.
  • சமூக வலைதளங்களில் வீடியோவை பதிவிட்ட நபர் யாரென்று சைபர் க்ரைம் போலீசார் அடங்கிய தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர்:

திருப்பூர் அனுப்பர்பாளையம் திலகர் நகரில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலைபார்க்கும் வடமாநில தொழிலாளர்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள், தமிழக வாலிபர் ஒருவரை பெல்ட், கட்டை, உள்ளிட்டவைகளை கொண்டு துரத்தி துரத்தி தாக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து வேலம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் வடமாநில தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள், இளைஞர்கள் திரண்டனர். அவர்கள் வடமாநில தொழிலாளர்களை முறைப்படுத்த வேண்டும். தமிழக இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும் , தமிழக வாலிபரை தாக்கிய வடமாநில தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் தமிழக வாலிபரை, வடமாநில தொழிலாளர்கள் தாக்கியதாக சமூக வலைதளங்களில் உண்மைக்கு புறம்பாக தகவல்கள் பகிரப்பட்டு வருவதாகவும், வீடியோவை தவறாக சித்தரித்து வெளியிட்டுள்ளதாகவும் திருப்பூர் மாநகர போலீசார் விளக்கம் அளித்தனர். மேலும் வீடியோவை பகிர்ந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.

மேலும் சமூக வலைதளங்களில் வீடியோவை பதிவிட்ட நபர் யாரென்று சைபர் க்ரைம் போலீசார் அடங்கிய தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News