உள்ளூர் செய்திகள்

பாசனத்திற்காக 18-ம் கால்வாயில் தண்ணீரை கலெக்டர் முரளிதரன் திறந்து வைத்தார்

முல்லைபெரியாற்றில் இருந்து 18-ம் கால்வாயில் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு கலெக்டர் முரளிதரன் திறந்து வைத்தார்

Published On 2022-09-14 10:34 IST   |   Update On 2022-09-14 10:34:00 IST
  • 18-ம் கால்வாய் மூலம் உத்தமபாளையம் தாலுகாவில் 10 கிராம பகுதியில் உள்ள 29 கண்மாய்கள், போடி தாலுகாவில் 3 கிராமங்களில் உள்ள 15 கண்மாய்கள் என மொத்தம் 44 கண்மாய்களில் தண்ணீர் தேக்கப்படுகிறது.
  • இதனைதொடர்ந்து பி.டி.ஆர் கால்வாயிலும் உத்தம பாளையம் பகுதி விவசாயத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

கூடலூர்:

தேனி மாவட்டம் கூடலூர் அருகே லோயர்கேம்ப் மின்நிலைய பகுதியில் முல்லைபெரியாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டு 18-ம் கால்வாய் திட்டம் கொண்டுவரப்பட்டது. தேவாரம், போடி மற்றும் உத்தமபாளையத்தில் உள்ள சில பகுதிகளில் ஏராளமான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனவசதி பெறுகின்றது.

18-ம் கால்வாய் மூலம் உத்தமபாளையம் தாலுகாவில் 10 கிராம பகுதியில் உள்ள 29 கண்மாய்கள், போடி தாலுகாவில் 3 கிராமங்களில் உள்ள 15 கண்மாய்கள் என மொத்தம் 44 கண்மாய்களில் தண்ணீர் தேக்கப்படுகிறது. இதன்மூலம் 4614 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது.

இந்நிலையில் 18-ம் கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கையை ஏற்று இன்று தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி மாவட்ட கலெக்டர் முரளிதரன் மதகைஇயக்கி பாசனத்திற்கு தண்ணீரை திறந்து வைத்தார். இன்றுமுதல் 30 நாட்களுக்கு 98 கனஅடிவீதம் தண்ணீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைதொடர்ந்து பி.டி.ஆர் கால்வாயிலும் உத்தமபாளையம் பகுதி விவசாயத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் கூடலூர் நகர்மன்ற தலைவர் பத்மாவதி லோகன்துரை, தாசில்தார் அர்ஜூனன், ஆர்.டி.ஓ பால்பாண்டியன், வி.ஏ.ஓ ஜெயலட்சுமி, 18-ம் கால்வாய் விவசாயிகள் சங்கதலைவர் ராமராஜ், மஞ்சளாறு வடிநிலகோட்ட விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 137.95 அடியாக உள்ளது. 1260 கனஅடிநீர் வருகிறது. 1867 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. வைைக அணையின் நீர்மட்டம் 70.44 அடியாக உள்ளது. 1985 கனஅடிநீர் வருகிறது. 2069 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடி, அணைக்கு வரும் 92 கனஅடிநீர் உபரியாக திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.31 அடியாக உள்ளது. 7 கனஅடிநீர் வருகிறது. 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

பெரியாறு 1, தேக்கடி 2 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

Tags:    

Similar News