உள்ளூர் செய்திகள்

விருதுநகர் கலெக்டர் மேகநாதரெட்டி தேசியக்கொடி ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அருகில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் உள்பட பலர் உள்ளனர்.

விருதுநகரில் குடியரசு தின கொண்டாட்டம்

Published On 2023-01-26 08:13 GMT   |   Update On 2023-01-26 08:13 GMT
  • விருதுநகரில் குடியரசு தின விழாவில் 134 போலீசாருக்கு முதல்-அமைச்சர் பதக்கங்களை கலெக்டர் வழங்கினார்.
  • அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களிலும் தேசியக் கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

விருதுநகர்

விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் இன்று குடியரசு தினவிழா நடைபெற்றது. கலெக்டர் மேகநாத ரெட்டி கலந்து கொண்டு காலை 8.15 மணிக்கு தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். பின்னர் அவர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் நடைபெற்ற விழாவில் விருதுநகர் சி.பி.சி.ஐ.டி. பாண்டி உள்பட 134 போலீசாருக்கு முதல்-அமைச்சர் பதக்கத்தை கலெக்டர் வழங்கினார். மேலும் சிறப்பாக பணியாற்றிய 247 அரசு அலுவலர்களுக்கு நற்சான்றிதழ்களையும் கலெக்டர் வழங்கினார்.

மாவட்ட திட்ட இயக்குநர் திலகவதி, அரசு மருத்துவமனை மருத்துவர்கள் முருகேசன், வெங்கடேஸ்வரன், ராஜேஷ், அருப்புக்கோட்டை தாசில்தார் அறிவழகன், நகரசபை கமிஷனர் ஸ்டான்லி பாபு, மக்கள் தொடர்பு அதிகாரி வெற்றிவேல் உள்ளிட்டோர் நற்சான்றிதழ் பெற்றனர். தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

முன்னதாக குடியரசு தின விழாவுக்கு வருகை தந்த கலெக்டரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசபெருமாள், மாவட்ட வருவாய் அதிகாரி ரவிகுமார், மக்கள் தொடர்பு அதிகாரி வெற்றிவேல் உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர் மொழிப் போர் தியாகி சங்கரலிங்கனார் மணிமண்டபத்துக்கு சென்ற கலெக்டர் அங்கு அவரது படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

விருதுநகர் தேசபந்து திடலில் தியாகிகள் நினைவுத் தூணில் தேசியக்கொடி ஏற்றிவைத்து மரியாதை செலுத்தப்பட்டது. விருதுநகர் நகரசபை அலுவலகத்தில் நகரசபை தலைவர் மாதவன் தேசியக்கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். இதில் துணைத் தலைவர் தனலட்சுமி, நகரசபை கமிஷனர் ஸ்டான்லிபாபு, கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர். விருதுநகர் பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் தலைவர் சுமதி ராஜசேகர் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் தலைவர் வசந்தி மான்ராஜ் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களிலும் தேசியக் கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

Tags:    

Similar News