மாநிலங்களால் உருவானது இந்தியா என்று கூறுவது பிரிவினைவாதம்- டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி
- மாநிலங்களால் உருவானது இந்தியா என்று கூறுவது பிரிவினைவாதம் என்று டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
- 1997-ம் ஆண்டு டிசம்பர் 15-ந் தேதி தொடங்கப்பட்ட புதிய தமிழகம் கட்சி 25-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர்
புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி ஸ்ரீவில்லிபுத்தூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-
1997-ம் ஆண்டு டிசம்பர் 15-ந் தேதி தொடங்கப்பட்ட புதிய தமிழகம் கட்சி 25-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. வருகிற டிசம்பர் 15-ந் தேதி ஸ்ரீவில்லிபுத்தூரில் வெள்ளி விழா மாநாடு நடைபெறுகிறது. 25 ஆண்டுகளாக சமூகத்தில் உள்ள விளிம்பு நிலை மக்களின் மேம்பாட்டிற்காக செயல்பட்டு வந்தோம்.
அடுத்த கட்டமாக இந்து சமுதாய மக்களை ஒன்றி ணைத்து, அவர்களின் உரிமைகளுக்காக போராட உள்ளோம். இந்து சமுதாயம் சாதி பிரிவினைகளால் ஆனது என்று அடையா ளப்படுத்தும் போக்கு நிலவி வருகிறது. இந்து என்றால் சனாதனம் என்றும், வருணாசிரம கொள்கையை அடிப்படையாக கொண்டது என்றும் பொய்யான தகவல் மக்களிடையே பரப்பப்பட்டு வருகிறது.
மேலும் வெளிநாடுகளில் உள்ள இந்து மக்கள் மீது தொடர் தாக்குதல் நடைபெற்று வருகிறது. புதிய தமிழகம் கட்சியின் வெள்ளி விழா மாநாட்டில் பல்வேறு சமுதாய தலைவர்கள், ஆன்மிக பெரியோர்கள் கலந்து கொள்கின்றனர்.
மதிப்பெண் வழங்க கூடிய அளவிற்கு தமிழக அரசின் செயல்பாடு இல்லை. ஆங்கிலேயர் காலத்தில் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியில் தான் மக்கள் சுதந்திரமாக செயல்பட முடியாத நிலை இருந்தது. தற்போது தமிழகத்திலும் எங்களை குறி வைத்து அதுபோன்ற அடக்குமுறை நடக்கிறது.
அமெரிக்கா, ஐரோப்பா போல இந்தியா என்பது ஒன்றியம் அல்ல. இந்தியா ஒரே தேசம். மாநிலம், மாவட்டம் என்பது நிர்வாக வசதிக்காக ஏற்படுத்தப்பட்டது. மாநிலங்கள் சேர்ந்தது தான் இந்தியா என கூறுவது அப்பட்டமான பிரிவினைவாதம்.
இவ்வாறு அவர் கூறினார்.
நேற்று காலை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஜீயரை டாக்டர் கிருஷ்ணசாமி சந்தித்து பேசினார். பின்னர் ஆண்டாள் கோவிலில் வழிபாடு நடத்தினார்.
இந்து மதத்தில் உள்ள அனைத்து சாதி பிரிவுகளையும் இணைத்து 'இந்து சமத்துவ சமூகநீதி கூட்டமைப்பு' உருவாக்கப்பட்டது. இந்து மதத்தை காக்கவும், உரிமை களுக்காக போராடவும் இந்த அமைப்பு செயல்படும். இதன் தலைமை ஒருங்கிணைப்பாளராக டாக்டர். கிருஷ்ணசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.