உள்ளூர் செய்திகள்

அடிப்படை வசதிகளின்றி உள்ள துணை சுகாதார நிலையம்.

துணை சுகாதார நிலையத்தை சீரமைக்க கிராமமக்கள் கோரிக்கை

Published On 2022-07-01 07:09 GMT   |   Update On 2022-07-01 07:09 GMT
  • கிராம மக்களின் நலன் கருதி அடிப்படை மருத்துவ சேவைகள் வழங்கும் நோக்கத்துடன் கட்டப்பட்ட துணை சுகாதார நிலையம் பராமரிப்பு ஏதுமின்றி பாழடைந்த நிலையில் உள்ளது.
  • அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாததால் குழந்தைகளும், முதியவர்களும் நடுக்காவேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

திருவையாறு:

திருவையாறு அருகே அம்பதுமேல்நகரம் கிராமத்தில் நடுக்காவேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சார்ந்த துணை சுகாதார நிலையம் இயங்குகிறது. 5 படுக்கைகளுடன் கூடிய பிரசவ வார்டு வசதி, மோட்டார் பம்ப் மூலம் மேல்நிலைத் தொட்டியில் நீரேற்றி குழாய்களின் வழியாக தண்ணீர் வசதி, மின் விசிறி, மின் விளக்கு வசதிகள், கழிவறை வசதிகள் மற்றும் கிராம சுகாதார. செவிலியர் தங்கிப் பணிபுரிவதற்கான சமையலறை, கழிவறை வசதிகளுடன் கூடிய குடியிருப்பு வசதிகளுடன் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு டேனிடா நல்வாழ்வுத் திட்டத்தின் மூலம் இந்த துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டது.

1 டாக்டர், 2 நர்சுகள் மற்றும் தங்கிப் பணிபுரியும் கிராம சுகாதார செவிலியர் ஒருவர் ஆகிய. குறைந்தபட்சம் 4 மருத்துவப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு இக்கிராமம் உள்பட சுற்றியுள்ள குழிமாத்தூர், கடம்பன்குடி, அல்சகுடி மற்றும் அள்ளூர் ஆகிய 5 கிராம மக்களின் பொதுநலம் மற்றும் மகளிர் பிரசவகால பரிசோதனைகள், சிகிச்சைகள், தடுப்பூசிகள், ஊட்டச்சத்து மாத்திரைகள் வழங்குதல் ஆகிய அடிப்படை மருத்துவ சேவைகள் வழங்கும் நோக்கத்துடன் கட்டப்பட்ட இந்த துணைச் சுகாதார நிலையம் சமீபகாலமாக பராமரிப்பு ஏதுமின்றி, பாழடைந்த நிலையில் உள்ளது.

இந்நிலையத்தில் தற்போது மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் பொது மருத்துவத்திற்கான மாத்திரை வழங்கும் பணி மட்டுமே செயல்படுத்தப்பட்டு வருகிறது.

உள்ளூரில் சுகாதர நிலையம் இருந்தும் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாததால் 5 கிராம மகளிரும், குழந்தைகளும், முதியவர்களும் வெகுதூரத்திலுள்ள நடுக்காவேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

எனவே அம்பதுமேல்நகரம் கிராமத்தில் உள்ள துணை சுகாதார நிலையத்தை சீரமைத்து, மகளிர் பிரசவ கால 5 படுக்கை வசதி, தண்ணீர் வசதி மற்றும் மின்சார வசதிகள் செய்தும் மற்றும் தேவையான மருத்துவர் மற்றும் செவிலியர்களை நியமனம் செய்தும் அம்பதுமேல்நகரம் உள்ளிட்ட 5 கிராம மக்களுக்கான மருத்துவ சேவைகள் முழுமையாகக் கிடைக்கச் செய்து உதவிட ஆவன செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகாரிகளிடம் அம்பதுமேல்நகரம் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News