உள்ளூர் செய்திகள்

நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி, வேந்தர் விசுவநாதன் மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கிய காட்சி. அருகில் அமெரிக்க தேசிய அறிவியலமைப்பு இயக்குனர் டாக்டர் சேதுராமன் பஞ்சநாதன், துணை தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன், ஜி.வி. செல்வம், உதவி துணை தலைவர் காதம்பரி விசுவநாதன் உள்ளனர். பட்டம் வாங்கிய மாணவ, மாணவிகள்.  

வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் 37-வது பட்டமளிப்பு விழா

Published On 2022-08-18 09:49 GMT   |   Update On 2022-08-18 09:50 GMT
  • 8,168 மாணவ, மாணவிகளுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பட்டம் வழங்கினார்
  • கல்விக்கு அதிக நிதி ஒதுக்க வேந்தர் விசுவநாதன் வலியுறுத்தல்

வேலூர்:

வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் 37-வது பட்டமளிப்பு விழா இன்று நடந்தது. வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை தாங்கினார்.கவர்னர் ஆர்.என். ரவி கலந்து கொண்டு 8,168 மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

இந்தியா அமெரிக்க நட்புறவு நீண்ட வரலாறு கொண்டது. 2 நாடுகளும் ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. தற்போது ஒரு நாடு சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயற்சிக்கிறது. உலக அமைதிக்காக இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்பட வேண்டும். உலக அமைதிக்கு இந்த இரு நாடுகளின் பங்களிப்பு மிக முக்கியம்.

மாணவர்கள் வாழ்க்கை பயணத்தில் தொடர்ந்து வெற்றி பெற முடியாது. தோல்விகளை எதிர்கொள்ள வேண்டும்.புதிய சிந்தனைகளை ஏற்படுத்த வேண்டும் மாற்றத்தை கொண்டு வரும் வகையில் சிந்தியுங்கள். இன்னும் 25 ஆண்டுகளுக்கு இந்தியா 100வது சுதந்திர தின விழாவை கொண்டாடும்போது நாட்டின் வளர்ச்சிக்கு உங்களுடைய பங்களிப்பு அதிகம் தேவையானதாக இருக்கும்.

இந்தியாவில் 400 தொழிற்சாலை இருந்தன. தற்போதைய 80 ஆயிரம் தொழிற்சாலைகளாக உயர்ந்துள்ளது.வரும் காலத்தில் மேலும் அதிகரிப்பது உங்களுடைய கையில் உள்ளது.

கொரோனா பாதிப்பின் போது இந்தியா 200 கோடி தடுப்பூசிகளை மற்ற நாடுகளுக்கு வழங்கியது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அதிக பங்களிப்பு உள்ளது. இந்தியாவில் திறந்தவெளியில் மலம் கழிப்பது இல்லாத நிலை உள்ளது.இது உலக அளவில் நம்மை திரும்பி பார்க்க செய்துள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் கவுரவ விருந்தினராக அமெரிக்க தேசிய அறிவியலமைப்பு இயக்குனர் டாக்டர் சேதுராமன் பஞ்சநாதன் இந்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை செயலாளர் ஸ்ரீவாரி சந்திரசேகர் சென்னைக்கான அமெரிக்க நாட்டின் துணை தூதர் ஜூடித் ராவின் விஐடி பல்கலைக்கழக துணை தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன், ஜி.வி.செல்வம், செயல் இயக்குனர் சந்தியா பெண்டாரெட்டி, உதவி துணை தலைவர் காதம்பரி ச. விசுவநாதன், துணைவேந்தர் ராம்பாபு கோடாலி, இணை துணை வேந்தர் நாராயணன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கல்விக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும்

நிகழ்ச்சியில் வேந்தர் விசுவநாதன் பேசியதாவது:-

இந்தியாவில் உயர் கல்வியில் மாணவர் சேர்க்கை விகிதம் பின்தங்கி இருக்கிறது. கல்விக்கு அதிக முதலீடு செய்தால் தான் முன்னேற முடியும். உலகில் 30 நாடுகளில் இலவச கல்வி அளிக்கப்படுகிறது.

இந்த நாடுகளில் அறிவியல் தொழில்நுட்பம் ஆராய்ச்சி முன்னேறி செல்கிறது. இந்தியாவில் கேரளாவில் கல்விக்கு அதிக அளவில் முதலீடு செய்யப்படுகிறது. பீகாரில் மிகவும் குறைந்த அளவில் கல்விக்கு முதலீடு செய்யப்படுகிறது.

2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 14 கோடி பேர் உயர் கல்வி பெற தகுதியாக இருந்தனர். அதில் சுமார் 3½ கோடி பேர் மட்டுமே உயர் கல்வி பெற முடிந்தது. ஏழை நடுத்தர வர்க்கத்தினர் அதிக கட்டணம் செலுத்தி கல்வி பெற முடியாத நிலை உள்ளது.மத்திய மாநில அரசுகள் கல்விக்கு அதிக முதலீடு அளிக்க முன்வர வேண்டும்.அனைவருக்கும் உயர் கல்வி கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3-வது இடம்

இந்திய அளவில் விஐடி பல்கலைக்கழகம் தற்போது 3-வது இடத்தில் உள்ளது. உலக அளவில் 600 முதல் 700 இடங்களில் இருக்கிறோம்.இது போதாது உலக அளவில் முதல் 200 இடங்களில் பிடிக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News