மரக்கிளை முறிந்து விழுந்து மின்கம்பம் துண்டானது
- ஒடுகத்தூரில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது
- போக்குவரத்து பாதிப்பு
அணைக்கட்டு:
ஒடுகத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட அண்ணாநகர் ஒடுகத்தூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.
மரக்கிளை முறிந்து விழுந்தது
அப்போது, சிவன் கோவில் அருகே இருந்த புளியமரக்கிளை முறிந்து அங்கு சாலையோரம் இருந்த மின் கம்பத்தின் மீது விழுந்தது. இதில், மின் கம்பம் இரண்டாக உடைந்து அந்தரத்தில் தொங்கியது. அப்போது, மின்சாரம் இல்லாததால் பெரும் விபத்து தடுக்கப்பட்டது.
இதையடுத்து, நகர செயலாளர் பெருமாள்ராஜா, வார்டு கவுன்சிலர்கள் ஜெயந்தி வெங்கடேசன், புனிதா சவுரிராஜன், கீர்த்தனா வாசு, வி.ஏ.ஓ. அபிலேஷ் ஆகியோர் உடனடியாக பொதுமக்கள் உதவியுடன் மின் கம்பம் மற்றும் சாலையில் விழுந்த புளியமரக்கிளைகளை அப்புறப்படுத்தினர்.
இதனால், ஒடுகத்தூரில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் மின்கம்பம் உடைந்ததால் அதனை சீரமைக்கும் பணியிலும் மின்வரிய ஊழியர்கள் ஈடுபட்டனர்.
அதேபோல் ஒடுகத்தூர், வேலூர் சாலையோரங்களில் வீடு மற்றும் மின்கம்பங்கள் அருகே புளியமரங்கள் அதிகம் உள்ளது.
தற்போது, பருவமழை காலம் என்பதால் ஆபத்தான நிலையில் உள்ள மரக்கிளைகளை வெட்டி அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.