சத்துவாச்சாரி டபுள் ரோட்டில் உள்ள பி. ஏ.டி.சி திருமண மண்டபத்தை சீரமைப்பது குறித்து கலெக்டர் குமாரவேல் பாண்டியன் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சத்துவாச்சாரி டபுள் ரோட்டில் உள்ள போக்குவரத்து துறை மண்டபம் மீண்டும் பயன்பாட்டுக்கு வருகிறது
- கலெக்டர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு
- சமூக விரோதிகள் தொல்லை அதிகரிப்பு
வேலூர்:
வேலூர் சத்துவாச்சாரி டபுள் ரோடு பகுதியில் போக்குவரத்து துறைக்கு சொந்தமான மண்டபம் உள்ளது. கடந்த 1994 -ம் ஆண்டு இந்த மண்டபம் கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்தது.
சில ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாததால் தற்போது மண்டபம் சிதிலமடைந்து காணப்படுகிறது.
அதை சுற்றியுள்ள வளாகப் பகுதி புதர் மண்டி கிடக்கிறது. இந்த மண்டபத்தை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று காலை கலெக்டர் குமரவேல் பாண்டியன் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, தாசில்தார் செந்தில், மாநகராட்சி என்ஜினியர் கண்ணன் ஆகியோர் மண்டபத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். திட்ட மதிப்பீடு குறித்து அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
அதே மண்டபத்தை மீண்டும் சீரமைப்பதா அல்லது அதனை அப்புறப்படுத்தி விட்டு புதிதாக கட்டுவதா என்பது குறித்து அறிக்கை கேட்டுள்ளோம். அதற்குப் பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும் என கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்தார்.
அதிகாரிகள் ஆய்வு செய்துவிட்டு சென்ற பிறகு அந்த பகுதியைச் சேர்ந்த குடியிருப்பு நல சங்க நிர்வாகிகள் அங்கு வந்தனர். அவர்கள் இந்த இடம் பூங்காவிற்கு சொந்தமான இடம். இதனை குடியிருப்பு நலச் சங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்றனர்.
போக்குவரத்து மண்டபம் அமைந்துள்ள பகுதியில் ஏராளமான மரங்கள் உள்ளன. இந்த பகுதியில் இரவு மற்றும் மாலை நேரங்களில் சமூக விரோதிகள் வந்து மது குடிப்பதும் வழக்கமாக உள்ளது. மேலும் சிலர் அந்த இடத்தில் அத்துமீறி செயல்படுகின்றனர்.
அங்குள்ள புதர்களை அகற்றிவிட்டு மின்விளக்குகள் அமைக்க வேண்டும். இதன் மூலம் சமூக விரோத செயல்களை தடுக்க முடியும் என வலியுறுத்தினர்.