வெள்ளப்பெருக்கால் பாலாற்றில் மண்சாலை அடித்து செல்லப்பட்டது
- 30 கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிப்பு
- 20 கிலோ மீட்டர் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஏரி, குளம், குட்டை போன்ற நீர் நிலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் பாலாற்றில் நேற்று முதல் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மழைநீர் கரைபுரண்டு ஓடியது.
இதன் காரணமாக குடியாத்தம் அடுத்த மேல் ஆலத்தூர் கிராமத்தில் இருந்து அகரம்சேரி கிராமத்திற்கு செல்ல அமைக்கப்பட்ட தற்காலிக மண் சாலையும் அடித்து செல்லப்பட்டது.
இந்த ஆற்றின் வழியாக செல்லும் கொத்தகுப்பம், பட்டு, மேல்ஆலத்தூர், ஆலம்பட்டை, கூட நகரம், உள்ளி, குடியாத்தம், ஒலக்காசி, அகரம்சேரி, உள்ளிட்ட சுமார் 30-க்கும் மேற்பட்ட கிராம மக்களின் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கிராம மக்கள் சுமார் 20 கிலோ மீட்டர் சுற்றி செல்லும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
மண்சாலை அடித்துச் செல்லப்பட்டதால் தினந்தோறும் அந்த வழியாக செல்லும் கூலித் தொழிலாளர்கள், தோல் தொழிற்சாலைக்கு செல்லும் தொழிலாளர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.