உள்ளூர் செய்திகள்

வேலூர் பாலாற்றில் லத்தேரி வாலிபரை வெட்டி கொலை செய்து வீசியதாக வதந்தி

Published On 2023-02-07 15:03 IST   |   Update On 2023-02-07 15:03:00 IST
  • போலீசாரை அலைக்கழித்தது யார்? விசாரணை
  • ஏராளமானோர் குவிந்ததால் வாகன நெரிசல் ஏற்பட்டது

வேலூர்:

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி அம்பேத்கர் காலனியை சேர்ந்த வாலிபர் ஒருவர் நேற்று முன்தினம் இரவு லத்தேரி பஸ் நிலையத்தில் உள்ள ஜவுளி கடைக்கு சென்று அங்கு இருந்த கடையின் உரிமையாளர் பாபு என்பவரிடம் தகராறில் ஈடுபட்டார். தகராறு முறியதால் பாபு மற்றும் அவரது நண்பர் சுதாகர் ஆகியோருக்கு கத்தி குத்து விழுந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக லத்தேரி போலீசார் வழக்கு பதிவு செய்து கத்தியால் குத்திய வாலிபரை தேடி வந்தனர்.இந்த நிலையில் போலீசாரால் தேடப்பட்டு வந்த வாலிபரை கொலை செய்து வேலூர் விருதம்பட்டு பாலாற்று பகுதியில் கை, கால் தலையை துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்டு உள்ளதாக தகவல் பரவியது.

இதுகுறித்து தகவல் அறிந்த காட்பாடி, விருதம்பட்டு மற்றும் தனிப்படை போலீசார் புதிய பஸ் நிலையம் அருகே விருதம்பட்டு பாலாற்று பகுதிக்கு விரைந்தனர். அங்கு அவர்கள் ஆற்றின் ஓரத்தில் உள்ள சுடுகாடு, பாலாறு பாலம் ஆகிய பகுதிகளில் வாலிபரின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். மேலும் ஆற்றில் இறங்கியும் ஆற்றில் உள்ள செடி, கொடி, புதர்கள் மண்டி கிடந்த பகுதிகளிலும் உடல் ஏதேனும் கிடக்கிறதா? என்று தேடிப்பார்த்தனர்.

போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணனும் அங்கு விரைந்து வந்தார். அங்கு அவர் சுடுகாடு மற்றும் பாலாற்று பகுதியில் விசாரணை மேற்கொண்டார். பின்னர் அவர் கூறுகையில்:-

வாலிபரின் செல்போன் டவர் ஒடுகத்தூர் பகுதியில் காண்பித்தது. சிறிது நேரத்தில் அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்ததால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என நம்பினோம்.

இதனால் போலீசார் அவரது உடலை தேடும் பணியில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.பாலாற்றில் ஏராளமான போலீசார் உடலை தேடிய சம்பவம் அந்தப் பகுதியில் பரவியது. எனவே அப்பகுதியை சேர்ந்த மக்களும், பாலத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் பலர் தங்களது வாகன ங்களை பாலத்தின் மீது நிறுத்திவிட்டு வேடிக்கை பார்த்தனர்.

இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் அங்கு வேடிக்கை பார்த்தவர்களை விரட்டினர்.

தேடுதல் முடிவில் அங்கு தலையோ, கை, கால்களோ, உடலோ எதுவும் கிடைக்கவில்லை. யாரோ வேண்டுமென்றே வதந்தியை பரப்பியது தெரியவந்தது.

தவறான தகவலை பரப்பி போலீசாரை அலைக்கழிக்க விட்டது யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News