வேலூர் கோட்டை அகழியில் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பிணத்தை மீட்ட காட்சி.
கோட்டை அகழியில் போர்வையில் கட்டி வீசப்பட்ட பிணம் மீட்பு
- கொலையா? விசாரணை
- குற்றவாளிகள் பிடிபட்ட பின்பே கொலைக்கான காரணம் தெரிய வரும்
வேலூர்:
வேலூர் கோட்டை அகழியில் சிவப்பு போர்வையால் சுற்றப்பட்ட பிணம் கிடப்பதாக வேலூர் வடக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் கோட்டை அகழிக்கு சென்று விசாரணை நடத்தினர்.
பெரியார் பூங்கா மற்றும் பொருட்காட்சி நடக்கும் திடல் இணையும் இடத்தில், போர்வையால் சுற்றப்பட்ட நிலையில் பிணம் மிதந்தது.
அதிக அளவில் துர்நாற்றம் வீசியதால், போலீசாரால் அருகில் செல்ல முடியவில்லை. சுமார் 2 மணி நேரம் ஆம்புலன்சுக்காக போலீசார் நீண்ட நேரம் காத்திருந்தனர்.
பின்னர் அனைவரும் மூக்கில் மாஸ்க் உள்ளிட்ட துணிகளை அணிந்து கொண்டு, அருகில் இறங்கி பிணத்தை மீட்டனர்.
புதரில் சிக்கிக் கொண்டிருந்ததால் பிணத்தை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. உடல் அழகிய நிலையில் இருந்ததால் இறந்தது ஆணா, பெண்ணா என்பது தெரியவில்லை.
சம்பவ இடத்தில் மோப்ப நாய் சாரா கொண்டுவரப்பட்டது. அது அகழியில் இருந்து பூங்கா நோக்கி ஓடியது. கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர்.
மீட்கப்பட்ட உடலை பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து வேலூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில்:-
மர்ம நபர்கள் கொலை செய்துவிட்டு, உடலை சிவப்பு போர்வையால் சுற்றி கொண்டு வந்து வீசி சென்றுள்ளனர்.
அதிக அளவில் துர்நாற்றம் வீசுவதால் சுமார் 2 நாட்களுக்கு முன்பு கொலை சம்பவம் நடந்திருக்கும் என தெரிகிறது.
கடந்த ஒரு வாரத்தில் வேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் யாராவது காணாமல் போனார்களா? என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம்.
விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள். கண்கானிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகிறோம். குற்றவாளிகள் பிடிபட்ட பின்பே கொலைக்கான காரணம் தெரிய வரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.