கிரீன் சர்க்கிள் பகுதியில் மழைநீர் சூழ்ந்தது
- போக்குவரத்து நெரிசல்- பொதுமக்கள் அவதி
- அதிகபட்சமாக 88 மில்லி மீட்டர் மழை பதிவு
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று பகலில் வெயில் சுட்டெரித்தது.
மாலை 4 மணியளவில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. அதைத்தொடர்ந்து கருமேகங்கள் திரண்டு இருள் சூழ்ந்தது. மாலை 5 மணியளவில் திடீரென மழை பெய்ய தொடங்கியது.
முதலில் மிதமாக பெய்த மழை நேரம் செல்ல செல்ல கனமழை கொட்டித்தீர்த்தது. அப்போது இடி, மின்னல், காற்றுடன் சுமார் 2 மணி நேரம் தொடர்ந்து பலத்த மழை பெய்தது. அதன்பிறகு விடியும் வரை சீராக மழை பெய்தது.
வேலூரில் நேற்று மாலை பெய்த மழையால் தெருக்கள் மற்றும் சாலையோரங்களில் மழைநீர் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியது.
கிரீன் சர்க்கிள் பகுதியில் நாலாபுறமும் மழை வெள்ளம் சூழ்ந்தது.
மழைநீரை கடந்து செல்ல வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். இதனால் கிரீன் சர்கிள் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தகவல் அறிந்த 10-க்கும் மேற்பட்ட போலீசார் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
அதேபோல் திருமலை-திருப்பதி தேவஸ்தான தகவல் மையம், காமராஜர் சிலை அருகே, ஆற்காடு சாலையில் உள்ள அம்பேத்கர் சிலை அருகே உள்பட பல்வேறு இடங்களில் மழைநீர் குட்டைபோல் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர்.
மழைக்காலங்களில் சாலைகளில் மழைநீர் தேங்குவது தொடர் கதையாக உள்ளது. சிறிய மழைக்கே வேலூரில் ஆங்காங்கே மழை தேங்கி விடுகிறது.
தொடர் பருவ மழை பெய்யும் காலங்களில் பொதுமக்கள் அவதி அடைவது வாடிக்கையாகிவிட்டது. எனவே சாலைகளில் மழைநீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் பேரணாம்பட்டில் அதிகபட்சமாக 88 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. அதேபோல் வேலூரில் 39, காட்பாடியில் 62, மேல் ஆலத்தூரில் 41.10, கே.வி. குப்பத்தில் 48.20, குடியாத்தத்தில் 85, ஒடுகத்தூரில் 73 மில்லி மீட்டர் மழை பதிவானது.