உள்ளூர் செய்திகள்

அணைக்கட்டு அருகே சிறுத்தை நடமாட்டம்

Published On 2023-09-14 15:17 IST   |   Update On 2023-09-14 15:17:00 IST
  • 10 கிராமங்களில் விடிய, விடிய ரோந்து
  • வனத்துறையினர் 13 பேர் கொண்ட குழுவினர் ஈடுபட்டனர்

அணைக்கட்டு:

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அருகே உள்ள ஊனை மோட்டூர் கிராமத்தில் ஒருவரின் வீட்டின் முன்பு பூனை இறந்து கிடந்தது.

அந்த பூனை எப்படி இறந்தது என்பதை அறிய, வீட்டின் உரிமையாளர் தனது வீட்டு வாசலில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தார்.

அதில் வீட்டின் வாசலில் இருந்த பூனையை ஏதோ பெரிய விலங்கு ஒன்று கடித்து குதறிய காட்சிகள் பதிவாகி இருந்தது. அந்த விலங்கு சிறுத்தை போல் உள்ளது.

அந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

இது குறித்து தகவல் அறிந்த ஒடுகத்தூர் வனத்துறையினர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

பூனையை சிறுத்தை தான் கொன்றதா? இல்லை வேறு ஏதாவது விலங்கு கொன்றதா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த தகவல் சுற்றுவட்டார கிராமங்களில் காட்டு தீ போல் பரவியது. இதனால் பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே வராமல் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.

மேலும் பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த நிலையில் பூனையை கொன்றது சிறுத்தை இல்லை, நாய் என்று வனத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

மேலும் மாவட்ட வன அலுவலர் கலாநிதி உத்தரவின் பேரில், ஒடுகத்தூர் மற்றும் வேலூர் வனச்சரகத்தினர் இணைந்து 13 பேர் கொண்ட குழு அந்த கிராமத்தில் இரவு முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து நேற்று இரவும் 2-வது நாளாக வனத்துறையினர் ஊனை மோட்டூர், ஏரிப்புதூர், நாராயிணபுரம், கவுதமபுரம், ஊனை வாணியம்பாடி, ஊனை, ஊனை பள்ளத்தூர், பெரிய ஊனை, கந்தனேரி, அணைக்கட்டு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விடிய விடிய ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News