ஆறுகளில் இருந்து ஏரிகளுக்கு தண்ணீர் திருப்பி விடும்பணி தீவிரம்
- பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல்
- வடகிழக்கு பருவமழை சராசரி அளவே இருக்கும் என கணிப்பு
வேலூர்:
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த ஆண்டு பெய்த கனமழை யால் பெரும்பாலான ஏரிகள் நிரம்பின.
தொடர்ந்து கோடை காலத்தில் நீர் இருப்பு குறைந்த நிலையில் தென்மேற்கு பருவழையும் சராசரி அளவைவிட கூடுதலாகவே பெய்தது. இதன்காரணமாக பாலாற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பாலாற்றில் இருந்து நீர்வள ஆதாரத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளுக்கு நீர் நிரப்ப தடை விதிக்கப்பட்டது. வடகிழக்கு பருவமழை நீரை சேமிக்கவும் அந்த நேரத்தில் ஏரிகள் நிரப்பியிருந்தால் பொதுமக்களுக்கு பெரும் சேதம் ஏற்படக்கூடும் என்று கூறப்பட்டது.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கடந்த காலங்களில் ஆண்டு சராசரி மழையளவு 980 மி.மீ என்றளவு இருக்கும். அதில், பெரும்பகுதி வடகிழக்கு பருவமழை காலத்தில் கிடைக்கும் என்பதால் அதற்கு ஏற்ப ஏரிகளில் தண்ணீரை நிரப்ப தடை விதிக்கப்பட்டது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை விரைவில் முடிந்து வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. எனவே, இப்போதிருந்தே ஏரிகளில் நீர் நிரப்ப பொது பணித்துறை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.
பாலாறு மற்றும் கவுன்டன்யா, பொன்னை ஆறுகளில் இருந்து ஏரிகளுக்கு தண்ணீரை திருப்பும் பணி தொடங்கியுள்ளது.
இது தொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில்:-
''வடகிழக்கு பருவமழை சராசரி அளவே இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதில், குறைவு ஏற்படவும் வாய்ப்பும் இருப்பதாக கருதப்படு வதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆறுகளில் இருந்து ஏரிகளுக்கு தண்ணீரை நிரப்பும் பணி படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது.
அவ்வப்போது மழை பெய்து வருவதால் நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்துள்ளது. கிணறு பாசனமும் விவசாயிகள் மத்தியில் அதிகரித்துள்ளது'' என்று தெரிவித்தனர்.
மோர்தானா அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் அணைக்கு வரும் 460 கன அடி உபரி நீர் கவுன்டன்யா ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஜிட்டப்பள்ளி தடுப்பணையில் இருந்து ஏரிகளுக்கு தண்ணீரை திருப்பிவிட்டுள்ளனர்.
காட்பாடி அருகேயுள்ள ராஜாதோப்பு அணை 24.57 அடி உயரமுடையது. 20.52 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்க முடியும். அணையில் தற்போது 11.94 அடி உயரத்துடன் 3.41 மில்லியன் கன அடிக்கு நீர் இருப்பு உள்ளது.
அதேபோல், திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ராஜாதோப்பு ஓடை நீர்த்தேக்க அணை 26.24 அடி உயரத்துடன் 112.20 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்க முடியும். அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் அணைக்கு வரும் 94.24 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
நீர்வள ஆதாரத்துறை கட்டுப்பாட்டில் வேலூர் மாவட்டத்தில் உள்ள 101 ஏரிகளில் தற்போது 7 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 369 ஏரிகளில் 104 ஏரிகள் முழுமையாக நிரம்பி யுள்ளன. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 49 ஏரிகளில் 25 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன.
பாலாற்றை பொறுத்த வரை பள்ளிகொண்டா மற்றும் வேலூர் பாலாற்றில் எடுக்கப்பட்ட கணக்கின்படி 2,200 கன அடி நீர் சென்றுகொண்டிருக்கிறது. இதில், ஆந்திர மாநிலம் புல்லூர் தடுப்பணையில் இருந்து 270 கன அடி, மண்ணாற்றில் இருந்து 30, கல்லாற்றில் இருந்து 30, மலட்டாற்றில் இருந்து 1,050, அகரம் ஆற்றில் இருந்து 150, கவுன்டன்யாவில் இருந்து 579, பேயாற்றில் இருந்து 10, வெள்ளக்கல் கானாறு, அணைமடுகு, கண்டித்தோப்பு கானாறுகளில் இருந்து 20 கன அடிக்கு நீர்வரத்து வந்துகொண்டிருக்கிறது.