உள்ளூர் செய்திகள்

நிதி நிறுவனத்தில் கூடுதல் பணம் தருவதாக ரூ.46 லட்சம் மோசடி

Published On 2023-05-31 09:24 GMT   |   Update On 2023-05-31 09:24 GMT
  • எஸ்.பி. அலுவலகத்தில் பரபரப்பு புகார்
  • 2 வாரமாக உரிமையாளரை காணவில்லை

வேலூர்:

வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குறைதீர்வு கூட்டம் இன்று நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் புகார் மனுக்களை அளித்தனர்.

காட்பாடி காங்கேயநல்லூரைச் சேர்ந்த விஜய் என்பவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

காட்பாடி திருநகர் பகுதியில் தனியார் நிதி நிறுவனம் இயங்கி வந்தது. இதில் ரூ.1 லட்சம் செலுத்தினால் கூடுதலாக 20 ஆயிரம், 10 மாதங்கள் வழங்குவதாக தெரிவித்தனர்.

இதனை நம்பி நான் மற்றும் எனது நண்பர்கள் சேர்ந்து ரூ.46 லட்சம் முதலீடு செய்தோம்.மேலும் தீபாவளி சேமிப்பு திட்டத்தில் இந்த நிதி நிறுவனத்தில் ரூ. 43 ஆயிரத்து 500 செலுத்தினோம். ஆனால் நிதி நிறுவனத்தில் கூறியபடி லாபம் பணம் எதுவும் வழங்கவில்லை.

இது பற்றி கேட்பதற்காக நேரில் சென்றோம். அந்த நிறுவனம் மூடப்பட்டுள்ளது.கடந்த 2 வாரமாக அதன் உரிமையாளரையும் காணவில்லை. இதனால் நான் மிகுந்த மன உளைச்சல் அடைந்துள்ளேன்.

எனவே நிதி நிறுவன உரிமையாளரை கண்டுபிடித்து எங்களுடைய பணத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கே.வி குப்பம் அருகே உள்ள கொத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த எழிலரசி என்ற இளம் பெண் அளித்த மனுவில் வரதட்சணை வன்கொடுமை செய்து கொலை மிரட்டல் எடுக்கும் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

Tags:    

Similar News