வேலூர் முள்ளிப் பாளையத்தில் உள்ள கோவிலில் மாணவர்களுக்கு பாடம் நடத்திய காட்சி.
பள்ளியில் மழை நீர் புகுந்ததால் கோவிலில் பாடம் நடத்தினர்
- வீட்டில் வசிக்க முடியாமல் உறவினர் வீடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்
- மாணவ மாணவிகள் பள்ளிக்கு செல்ல முடியவில்லை
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்தது.
நேற்று இரவு மாலை முதல் விடிய விடிய பலத்த மழை கொட்டி தீர்த்தது.இதன் காரணமாக வேலூர் முள்ளிப்பாளையம் தர்கா தெருவில் உள்ள 30-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
மேலும் சாலை முழுவதும் தண்ணீரால் சூழப்பட்டுள்ள தால் அப்பகுதி பொது மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்தனர்.
முழங்கால் அளவு தண்ணீரில் வெளியே வந்து அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கிச் செல்லும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
அதேபோல் அப்பகுதியில் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் மழைநீர் புகுந்ததால் மாணவ மாணவிகள் பள்ளிக்கு செல்ல முடியவில்லை.
இதையடுத்து ஆசிரியர்கள் மாணவ மாணவிகளை அழைத்து வந்து அங்குள்ள 2 கோவில்களில் பாடம் நடத்தினர்.
இது குறித்த பகுதி பொதுமக்கள் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் மழை வரும் போதெல்லாம் இப்பகுதி வெள்ளத்தால் சூழப்படுகிறது அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் அனை வரும் வந்து பார்த்துவிட்டு உணவு மட்டும் வழங்கி விட்டு செல்கின்றனர்.
இதற்கு நிரந்தரமான தீர்வு காண இதுவரை எடுக்கவில்லை. நாங்கள் இதே போல அவதிப்பட்டு வருகிறோம். உடனடியாக அரசு கவனத்தில் கொண்டு இப்பகுதிக்கு ஒரு நிரந்தர தீர்வை காண வேண்டும் என்றும் வேதனையுடன் தெரிவித்தனர்.
மேலும் அங்கு தற்போது வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதால் வீட்டில் வசிக்க முடியாமல் உறவினர் வீடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.