உள்ளூர் செய்திகள்

வேலூர் பாலாற்றில் அதிகளவில் தண்ணீர் செல்லும் காட்சி.

தொடர்மழை காரணமாக பாலாற்றில் 1,460 கன அடி தண்ணீர் வருகிறது

Published On 2022-11-15 10:00 GMT   |   Update On 2022-11-15 10:00 GMT
  • வெள்ள அபாய எச்சரிக்கை
  • பொதுமக்கள் ஆறுகளை கடக்க வேண்டாம் என அறிவுறுத்தல்

வேலூர்:

வேலூர், திருப்பத்தூர் ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 11-ந் தேதி தொடங்கி 13-ந் தேதி வரை பரவலான கன மழை பெய்தது. வரும் நாட்களிலும் மழை தொடரும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

தமிழக -ஆந்திர எல்லையில் கவுன்டன்யா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மோர்தானா அணை 37.72 அடி உயரம் கொண்டது. அணையில் 261.36 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்க முடியும். அணை ஏற்கெனவே முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் அணைக்கான நீர்வரத்து முழுவதும் உபரி நீராக ஆற்றில் கலந்து வருகிறது.

தொடர் மழையின் காரணமாக அணைக்கான நீர்வரத்து நேற்று 250 கன அடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரே நீர்த்தேக்க அணையான ஆண்டியப்பனூர் ஓடை நீர்த்தேக்கம் 26.64 அடி உயரம் கொண்டது.

அணை ஏற்கெனவே முழு கொள்ளளவை எட்டியுள்ளதால், தொடர் மழையால் அணைக்கு வரும் 43.79 கன அடி நீரையும் வெளியேற்றி வருகின்றனர்.

வேலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 101 ஏரிகளில் 12 முழுமையாக நிரம்பியுள்ளன. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 369 ஏரிகளில் 137 ஏரிகள், திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 49 ஏரிகளில் 31 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 519 ஏரிகளில் 180 ஏரிகள் முழுமையாக நிரம்பி உள்ளன.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக பாலாற்றுக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. தமிழக -ஆந்திர எல்லையில் உள்ள புல்லூர் தடுப்பணையில் இருந்து 415 கன அடிக்கும், மண்ணாற்றில் இருந்து 100, கல்லாற்றில் இருந்து 50, மலட்டாற்றில் இருந்து 250, அகரம் ஆற்றில் இருந்து 340, மோர்தானாவில் இருந்து 250, பேயாற்றில் இருந்து 40, வெள்ளக்கல் கானாறு, ஆணைமடுகு கானாறு, கண்டித்தோப்பு கானாறுகளில் இருந்து 20 என பாலாற்றில் 1,460 கன அடிக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. 

பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:-

''மாவட்டத்தில் பெய்த கன மழையால் பாலாறு, கொட்டாறு, பொன்னையாறு, பேயாற்றில் இருந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது.

மேலும், அதிகரிக்க வாய்ப்புள்ளது என்பதால் பொதுமக்கள் ஆறுகளை கடக்கவோ, ஆற்றில் குளிக்கவோ மற்றும் குழந்தைகள் ஆற்றுப்படுகைகளில் விளையாட அனுமதிக்க வேண்டாம்'' என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News