உள்ளூர் செய்திகள்

தேசிய நுகர்வோர் பாதுகாப்பு குறித்து கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு ஊர்வலம் சென்றனர்.

அரசு துறைகளில் குறைபாடு இருந்தால் கோர்ட்டை அணுகலாம்

Published On 2023-03-15 14:36 IST   |   Update On 2023-03-15 14:36:00 IST
  • தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தின விழாவில் நீதிபதி பேச்சு
  • மாணவிகளின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடந்தது

வேலூர்:

வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட உணவு பொருள் வழங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தின விழா நடந்தது.

மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். விழாவுக்கு மாவட்ட வழங்கள் அலுவலர் சுமதி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட நுகர்வோர் நீதிபதி மீனாட்சி சுந்தரம் கலந்து கொண்டார். அவர் பேசியதாவது:-

நுகர்வோர்களுக்கு அதிக உரிமை உள்ளது. நீங்கள் வாங்கும் பொருள்களில் ஏதேனும் குறைகள் இருந்தால் நுகர்வோர் கோர்ட்டை அணுகலாம். ஆன்லைன் மூலமாகவே தங்களது புகார்களை பதிவு செய்யலாம்.

பொதுவாக வீட்டில் பயன்படுத்தப்படும் சமையல் கியாஸ் விபத்து ஏற்படும் போதும் அதற்கு காப்பீடு செய்து இருப்பார்கள் இழப்பீடு கிடைக்காவிட்டால் நுகர்வோர் கோர்ட்டை அணுகலாம்.

மருந்து மாத்திரை காலாவதியாகி இருந்தாலும், மருத்துவ சிகிச்சையில் குறைபாடு இருந்தாலும் கோர்ட்டை அணுகலாம். அரசு துறைகளில் எந்த சேவை குறைபாடு இருந்தாலும் நுகர்வோர்கள் உங்களது உரிமைகளை பெறுவதற்கு கோர்ட்டை அனுகினால் தீர்வு கிடைக்கும்.

பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வழக்குகள் விசாரணை மேற்கொள்ளப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் உணவு பொருள் பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் திறன் மேம்பாட்டு துறை, கூட்டுறவுத்துறை மருந்து கட்டுப்பாட்டு துறை உள்ளிட்ட துறைகள் சார்பில் விழிப்புணர்வு கண்காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது இங்கு பொது மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் செயல் விளக்கத்துடன் தெரிவிக்கப்பட்டது.

விழாவில் மாணவ மாணவிகளின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளும், சான்றிதழும் கோப்பைகளும் வழங்கப்பட்டன.

முன்னதாக மாணவ மாணவிகளின் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இதனை மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி தொடங்கி வைத்தார்.

Tags:    

Similar News