மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பைக் பேரணியை இந்திரா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இயக்குனர் டாக்டர் சங்கர் கொடியசைத்து தொடங்கி வைத்த காட்சி. அருகில் எஸ்.பி. ராஜேஸ் கண்ணன் உள்பட பலர் உள்ளனர்.
மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு பைக் பேரணி
- டாக்டர் சங்கர் தொடங்கி வைத்தார்
- காட்பாடி இந்திரா மல்டி ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரி சார்பில் நடந்தது
வேலூர்:
காட்பாடியில் உள்ள இந்திரா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, வெல்லூர் பைக்கர்ஸ் கிளப் மற்றும் பெண்கள் மோட்டார் சைக்கிள் கிளப் சார்பில் மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு பைக் பேரணி இன்று காலை நடந்தது. ஆஸ்பத்திரி நிர்வாக இயக்குனர் டாக்டர் சங்கர் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி பைக் பேரணியை தொடங்கி வைத்தார்.
சிறப்பு விருந்தினராக வேலூர் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் கலந்து கொண்டார். இந்திரா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை முன்பாக தொடங்கிய பைக் பேரணி ஓடை பிள்ளையார் கோவில் வழியாக விருதம்பட்டு, கிரீன் சர்க்கிள், வேலூர் கலெக்டர், பேலஸ் கேப், அண்ணா சாலை, திருப்பதி தேவஸ்தான வழியாக சென்று மீண்டும் ஆஸ்பத்திரி முன்பாக பேரணி நிறைவடைந்தது. பைக் பேரணிகள் சென்றவர்கள் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர்.
இதையடுத்து டாக்டர் சங்கர் பேசுகையில்:-
மார்பக புற்றுநோய் குறித்த பரிசோதனை அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் செய்யப்படுகிறது. பெண்கள் மார்பக புற்றுநோய் பரிசோதனை செய்வதற்கு கூச்சப்படுகின்றனர்.
முதலிலேயே மார்பக புற்றுநோய் கண்ட றியப்பட்டால் எளிதாக சரி செய்து விட முடியும். நாள்பட்ட மார்பக புற்றுநோயை சரி செய்வது கடினம் எனவே பெண்கள் அனைவரும் மார்பக புற்றுநோய் பரிசோதனை செய்ய கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் பேசுகையில்:- மாணவ- மாணவிகள் போதை பழக்கத்திற்கு அடிமை ஆவதில் இருந்து காப்பாற்ற தமிழகத்தை போதை இல்லா மாநிலமாக மாற்ற போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதற்காக பள்ளி கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன என்றார்.
நிகழ்ச்சியில் மகப்பேறு மருத்துவர் டாக்டர் லதா லட்சுமி காட்பாடி டிஎஸ்பி பழனி இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.