வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் பைக் திருட்டு அதிகரிப்பு
- கேமராக்கள் பழுதாகி உள்ளது; பார்க்கிங் வசதி இல்லை
- தினமும் ஒரு வாகனத்தை ஓட்டி சென்று விடுகின்றனர்
வேலூர்:
வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணா மலை மற்றும் வேலூர் புறநகர் மாவட்டங்களில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் வெளிநோயாளியாக வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரி
மேலும் உள்நோயா ளியாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் நோயாளிகளை பார்க்க வருபவர்கள், நோயாளிகளை சிகிச்சைக்கு அழைத்து வருபவர்கள் பைக் நிறுத்த பார்க்கிங் வசதி இல்லை.
பைக் திருட்டு
அவசர கதியாக வருபவர்கள் ஆஸ்பத்திரி வளாகத்தில் பைக்கை நிறுத்திவிட்டு பதற்றத்துடன் உள்ளே செல்லும் நிலைமை உள்ளது.இதனை பயன்படுத்திக் கொண்டு பைக் திருட்டு நடக்கிறது.
கடந்த சில மாதங்களாக பார்க்கிங் மற்றும் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் நிறுத்தப்படும் வாகனங்கள் திருட்டு போகும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. குறிப்பாக பிரசவ வார்டு பகுதியில் அதிகளவில் பைக் திருடு போகின்றன.
தற்போது தினமும் ஒரு பைக் திருடு போகிறது.வாகன உரிமையாளர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
கேமராக்கள் செயல்படுவது இல்லை
அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் பொருத்தப்பட்டுள்ள ஏராளமான கேமராக்கள் செயல்படுவது இல்லை.
திருடர்கள் முக கவசம் அணிந்து வருவதால் அவர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே ஆஸ்பத்திரி நிர்வாகம் திருட்டு சம்பவத்தை தடுக்க பார்க்கிங்கில் மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி வருபவர்களுக்கு டோக்கன் கொடுக்கும் முறை கொண்டு வர வேண்டும்.
மேலும் செயல்படாத கண்காணிப்பு கேமராக்களை சரி பார்க்க வேண்டும். அப்போது தான் பைக் திருட்டை தடுக்க முடியும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.