சதுப்பேரி ஏரியில் மேயர் சுஜாதா ஆய்வு செய்த காட்சி.
வேலூர் சதுப்பேரி ஏரியில் விநாயகர் சிலைகளை கரைக்க ஏற்பாடு
- மேயர் சுஜாதா ஆய்வு
- மதியம் 12 மணியிலிருந்து இரவு 8 மணிக்குள் முடிக்க வேண்டும்
வேலூர்,
வேலூர் மாநகராட்சி பகுதியில் விநாயகர் சதுர்த்தி ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்து முன்னணி சார்பில் மாவட்டம் முழுவதும் 508 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்கின்றனர்.
2-ந் தேதி வேலூரில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடக்கிறது. கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து சிலைகள் ஊர்வலம் தொடங்குகிறது. சைதாப்பேட்டை, கோட்டை, சுற்றுச்சாலை, கொணவட்டம் வழியாக சதுப்பேரி ஏரிக்கு கொண்டு செல்லப்படுகிறது.
விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. இன்று காலை மேயர் சுஜாதா, மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார், டி.எஸ்பி. திருநாவுக்கரசு மற்றும் இந்து முன்னணி கோட்டத்தலைவர் மகேஷ் ஆகியோர் சதுப்பேரி ஏரியில் விநாயகர் சிலைகள் கரைக்கக்கூடிய இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது சிலைகள் உள்ளே கொண்டு செல்லவும் கரைத்து விட்டு வெளியே செல்லவும் தனித்தனியாக வழியை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது.
மேலும் சிறிய சிலைகளை கரைப்பவர்களுக்கு தனி வழி ஏற்படுத்தப்படுகிறது. இது தவிர பெரிய சிலைகளை கரைக்க கிரேன் வசதி ஏற்படுத்துவது மின்விளக்கு வசதி ஏற்படுத்துவது குறித்து ஆலோசனை செய்தனர்.
மதியம் 12 மணியிலிருந்து இரவு 8 மணிக்குள் சதுப்பேரி ஏரியில் விநாயகர் சிலைகளை கொண்டு வந்து கரைத்து விட வேண்டும் என தெரிவித்துள்ளனர்.