4 ஏரிகளில் விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதி
- கலெக்டர் தகவல்
- சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாமல் கொண்டாட வேண்டும்
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாமல் விழாவை கொண்டாட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில் பொதுமக்கள் களிமண்ணால் செய்யப்பட்ட சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க வேண்டும். நீரில் கரையும் தன்மையுடைய மற்றும் தீங்கு விளைவிக்காத இயற்கை வர்ணங்களையுடைய விநாயகர் சிலைகளை உபயோகிக்க வேண்டும்.
ரசாயன வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க அனுமதிக்கப்படாது. மேலும், மாவட்ட நிர்வாகங்கள் கூறும் இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
அதன்படி, வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''வேலூரில் சதுப்பேரி, ஊசூர் ஏரி, கருகம்பத்தூர் ஏரி, குடியாத்தத்தில் நெல்லூர்பேட்டை ஏரிகளில் கரைக்க வேண்டும்.
மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாமல் கொண்டாட வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.