காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் கைது
- வேலூர் மாவட்டத்தில் கொடிகட்டி பறப்பதாக புகார்
- போலீசார் தீவிரமாக கண்காணிப்பு
வேலூர் :
வேலூர் அருகே உள்ள விரிஞ்சிபுரம் பஜார் வீதியில் உள்ள மரத்தடியில் காட்டன் சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
விரிஞ்சிபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த குடியாத்தம் நெல்லூர்பேட்டையை சேர்ந்த கணபதி (வயது26) பிரகாஷ் (29) பிச்சனூரை சேர்ந்த வெங்கடேசன் (51) ஆகியோரை மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.
அறிவழகன் என்பவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் காட்டன் சூதாட்டம் அதிக அளவில் நடப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது குறித்து உடனடி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே கூலித் தொழிலாளர் குடும்பங்களை சூழ்ச்சியில் இருந்து காப்பாற்ற முடியும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் கூறுகையில்:-
நம்பர் விளையாட்டான' காட்டன் சூதாட்டம்' வேலூர் பகுதிகளில் அமோகமாக நடக்கிறது.
ஆட்டோ டிரைவர்கள், காய்கறி, பூ, பழம் விற்கும் சிறு வியாபாரிகள், கட்டிட வேலை உட்பட தினக் கூலிக்குச் செல்லும் ஏழைத் தொழிலாளர்கள் என இவர்களைக் குறிவைத்தே காட்டன் சூது நடத்தப்படுகிறது. 'ஒரு ரூபாய் செலுத்தினால் 1,000 ரூபாய் கிடைக்கும்.
அதிர்ஷ்டம் வீட்டுக் கதவைத் தட்டுது' என்று ஆசை வார்த்தை கூறி, வியர்வை சிந்தி உழைக்கும் மக்களை இதில் ஈடுபட வைக்கின்றனர்.
மாலை நேரங்களில் முடிவுகள் அறிவிக்கப்ப டுகின்றன. இதுவரை ஒரு தொழிலாளிக்கும் 'ஜாக்பாட்' அடிக்கவில்லை. மீட்டர் வட்டிக்குக் கடன் வாங்கி காட்டன் விளையாடிய பல பேர் வீடு, பொருள்களை இழந்து நடுத்தெருவில் நிற்கிறார்கள்.
எனவே வேலூர் மாவட்டத்தில் காட்டன் சூதாட்ட த்தை முழுமையாக ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.