வேலூர் மாவட்டம் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ஆய்வுக் கூட்டம் அமைச்சர்கள் துரைமுருகன், நேரு, காந்தி தலைமையில் நடந்தது.
வேலூர் சாலைகளை சீரமைக்க ரூ.25 கோடி நிதி
- ஸ்மார்ட் சிட்டி பணிகள் ஜூன் மாதத்துக்குள் முடிக்கப்படும்
- அமைச்சர் நேரு தகவல்
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சி நிர்வாகங்களின் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது.
இதில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, ஆர்.காந்தி ஆகியோர் கலந்து கொண்டு வேலூர் ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாநகராட்சி நகராட்சி பகுதிகளில் செய்யப்பட்டுள்ள பணிகள் குறித்து ஆய்வு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் நேரு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மாநகராட்சி நகராட்சிக்கு சொந்தமான கடைகளை ஏலத்தில் எடுத்த பலர் வாடகை பாக்கி வைத்துள்ளனர். தனியார் கடைகளை விட மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளில் குறைந்த அளவு வாடகை வசூல் செய்யப்படுகிறது.
வாடகை வாங்கி செலுத்தாத கடைக்காரர்கள் கட்டாயம் பணம் செலுத்தி தான் ஆக வேண்டும். அவர்களுக்கு கால அவகாசம் கொடுக்க முடியாது.நகராட்சி துறையில் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கு பணம் இல்லை.வாடகை பாக்கியை செலுத்துவது வியாபாரிகளுக்கு சிரமமாக இருந்தாலும் வியாபாரம் செய்பவர்கள் பணத்தை செலுத்தி தான் ஆக வேண்டும்.
இது தவிர்க்க முடியாது தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் சிறிய அளவிலான விளையாட்டு மைதானம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும். மாநக ராட்சிகள் நகராட்சிகள் பேரூராட்சிகளில் கிடப்பில் உள்ள அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளேன்.
மாநகராட்சி நகராட்சி பகுதிகளில் தூய்மை பணியாளர்கள் சிறந்த முறையில் பணி செய்து வருகிறார்கள். அதனை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.
சரியாக பணி செய்யா தவர்களின் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும். தூய்மை பணியாளர்களுக்கு நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய உபகரணங்களை வாங்கி வருகிறோம். வேலூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்துக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
வேலூர் மாநகராட்சியில் சாலைகளை சரிசெய்ய ரூ.25 கோடி சிறப்பு நிதி முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் கேட்டு பெற்று தரப்படும்.
அதன் பின்னர் வேலூர் மாநகராட்சியில் அனைத்து சாலைகளும் சீரமைக்கப்படும். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பஸ் நிலையம் மீண்டும் நகராட்சிக்குள் கொண்டு வரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் நகராட்சி நிர்வாகத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, கலெக்டர்கள் குமாரவேல் பாண்டியன் (வேலூர்), பாஸ்கர பாண்டியன் (ராணிப்பேட்டை) பேரூராட்சிகளின் ஆணையர் செல்வராஜ், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் தட்சிணாமூர்த்தி, நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா, கதிர்ஆனந்த் எம்.பி., எம்.எல்.ஏக்கள் ஏ.பி.நந்தகுமார், கார்த்திகேயன், ஜே.எல்.ஈஸ்வரப்பன், வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.