உள்ளூர் செய்திகள்

டைல்ஸ் அதிபரை கத்தி முனையில் மிரட்டி 12 பவுன் நகை கொள்ளை

Published On 2022-10-25 15:18 IST   |   Update On 2022-10-25 15:18:00 IST
  • வீடு புகுந்து முகமூடி கும்பல் அட்டூழியம்
  • போலீசார் விசாரணை

வேலூர்:

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மேல்பட்டி அருகே உள்ள கீழ்ப்பட்டி பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 54). டைல்ஸ் செய்யும் தொழில் செய்து வருகிறார். இவருடைய மகன்கள் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். ராஜேந்திரன் அவரது மனைவி மட்டும் தனியாக வீட்டில் உள்ளனர்.

நேற்று இரவு ராஜேந்திரன் அவருடைய மனைவி இருவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். சாவியை கிரில் கதவுக்கு அருகே வைத்துள்ளனர்.

நள்ளிரவில் முகமூடி அணிந்து 4 பேர் கும்பல் அவர்களது வீட்டுக்கு வந்தனர். கிரில்கதவு அருகே இருந்த சாவியை எடுத்து கதவைத் திறந்து உள்ளே புகுந்தனர்.

சத்தம் கேட்டு ராஜேந்திரன் அவரது மனைவி இருவரும் கண்விழித்தனர். 4 பேரும் அவர்களை மடக்கி கத்தியை காட்டி மிரட்டினர்.

கத்தி முனையில் ராஜேந்திரன் வீட்டில் இருந்த 12 பவுன் தங்க நகை மற்றும் ரூ.4000 பணத்தை எடுத்துக் கொண்டு தப்பி சென்று விட்டனர்.இது குறித்து ராஜேந்திரன் மேல்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். வீட்டில் கைரேகை சேகரிக்கப்பட்டன.

சம்பவம் நடந்த வீட்டின் அருகில் ரெயில்வே தண்டவாளம் செல்கிறது. இதனை பயன்படுத்தி கொண்டு கும்பல் தண்டவாளம் பகுதி வழியாக தப்பிச் சென்றுள்ளனர்.

கதவுக்கு அருகிலேயே சாவியை வைத்திருந்ததால் அவர்கள் எளிதில் பூட்டை திறந்து உள்ளே வந்துள்ளனர்.

அந்த பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் ஏதேனும் உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News