உள்ளூர் செய்திகள்

தருமபுரியில் 10 மாதங்களில் நடந்த வாகன சோதனையில் விதிகளை மீறியவர்களிடம் ரூ.3.5 கோடி அபராதம் வசூல் -724 வாகனங்கள் பறிமுதல் செய்து முடக்கம்

Published On 2022-11-18 15:04 IST   |   Update On 2022-11-18 15:04:00 IST
  • அதிவேகத்தில் சென்ற 3 ஆயிரத்து 356 வாகனங்கள், எப்.சி. இன்றி இயக்கப்பட்ட 435 வாகனங்கள் கண்டறியப்பட்டன
  • வரி மற்றும் அபராதமாக ரூ.3.5 கோடி வசூலாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தருமபுரி, 

தருமபுரி மாவட்டத்தில் போக்குவரத்து அதிகாரிகள் தொடர் வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதில் கடந்த 10 மாதங்களில் மட்டும் வரி மற்றும் அபராதமாக ரூ.3.5 கோடி வசூலாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தருமபுரி மாவட்டத்தில் கடந்த ஜனவரி முதல் அக்டோபர் மாதம் வரை 10 மாதங்களில் போக்குவரத்து துறையின் சார்பாக வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தாமோதரன், தலைமையில் பறக்கும் படை மோட்டார் வாகன ஆய்வாளர் கதிர்வேல், தருமபுரி மோட்டார் வாகன ஆய்வாளர் தரணிதர், பாலக்கோடு பகுதி அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் வெங்கிடுசாமி, அரூர் பகுதி அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் குலோத்துங்கன் ஆகியோர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.

சுமார் 37 ஆயிரத்து 500 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டதில் அதிக அளவு லோடு ஏற்றிய 134 வாகனங்கள், உரிய ஆவணங்கள் இன்றி இயங்கிய 304 வாகனங்கள், அதிவேகத்தில் சென்ற 3 ஆயிரத்து 356 வாகனங்கள், எப்.சி. இன்றி இயக்கப்பட்ட 435 வாகனங்கள் கண்டறியப்பட்டன.

இதேபோல முறையான பராமரிப்பில்லாமல் இயங்கிய வாகனங்கள், ஒளிரும் பட்டைகள் ஒட்டா மல் இயக்கப்பட்டவை, விளக்குகள் எரியாத வாகனங்கள் என்று பல வாகனங்களை இயக்கியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வாகன சோதனையில் பிடிபட்ட பிற மாநிலங்களை சேர்ந்த வாகனங்களுக்கு சம்பந்தப்பட்ட ஆர்.டி.ஓ. அலுவலகம் மூலம் நோட்டீஸ் அனுப்பி அபராதம் பெறவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள அதிகாரிகள் இந்த சோதனை தொடர்ந்து நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News