உள்ளூர் செய்திகள்

புதிய டிரான்ஸ்பார்மர் பயன்பாட்டை துவக்கி வைத்த திருப்போரூர் தொகுதி எம்.எல்.ஏ பாலாஜி.

சொந்த செலவில் டிரான்ஸ்பார்மர் அமைத்த வி.சி.க. பிரமுகர்: திருப்போரூர் எம்.எல்.ஏ பாலாஜி திறந்து வைத்தார்

Published On 2022-11-16 17:22 IST   |   Update On 2022-11-16 17:22:00 IST
  • தற்போது பருவமழை பெய்த போது மின்சாரம் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டனர்.
  • 250 கே.வி. திறன் கொண்ட புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டுள்ளது

மாமல்லபுரம்:

மாமல்லபுரம் அடுத்த எடையூர் ஊராட்சிக்கு உட்பட்ட கொக்கிலமேடு கிராமம், கல்பாக்கம் அணுமின் நிலைய முக்கிய அதிகாரிகளின் நுழைவு வாயில் பகுதியில் உள்ளது. இங்கு 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இப்பகுதியில் பல ஆண்டுகளாக மின்வெட்டு நிலவி வந்தது. இதனால் குழந்தைகள், பள்ளி - கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். தொடர் மின்வெட்டு குறித்தும், புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்க வேண்டும் எனவும் மாமல்லபுரம் மின்வாரிய அலுவலகத்துக்கும், அதிகாரிகளுக்கும் கோரிக்கை வைத்தும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. என கூறப்படுகிறது.

தற்போது வடகிழக்கு பருவமழை பெய்த போதும் மின்சாரம் இல்லாமல் அப்பகுதியினர் மக்கள் அவதிப்பட்டனர். மக்களின் மனநிலையை கருத்தில் கொண்டு, மாமல்லபுரம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர செயலாளர் ப.ஐயப்பன் தனது சொந்த பணத்தை மாமல்லபுரம் மின் வாரிய அலுவலகத்துக்கு செலுத்தி புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்க வலியுறுத்தினார்.

இதையடுத்து, 250 கே.வி. திறன் கொண்ட புதிய டிரான்ஸ்பார்மரை மின் வாரிய அதிகாரிகள் அமைத்தனர். புதிய டிரான்ஸ்பார்மரின் இயக்கத்தை திருப்போரூர் எம்.எல்.ஏ பாலாஜி துவக்கி வைத்தார். திருக்கழுக்குன்றம் வி.சி.க ஒன்றிய செயலாளர் இ.சி.ஆர் அன்பு, எடையூர் ஊராட்சி தலைவர் சாமுண்டீஸ்வரி நடராஜன், வி.சி.க நிர்வாகி சாலமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செங்கல்பட்டு செயற்பொறியாளர் ரவிச்சந்திரன், உதவி செயற்பொறியாளர் பன்னீர்செல்வம், உதவி பொறியாளர் அசோக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Similar News