உள்ளூர் செய்திகள்

மரக்காணம் அருகே சேரும் சகதியுமாக உள்ள ஆத்திகுப்பம் வண்டிப்பாளையம் தார் சாலையை படத்தில் காணலாம்.

மரக்காணம் அருகே சேரும் சகதியுமாக உள்ள வண்டிப்பாளையம் ஆத்திகுப்பம் சாலை: 10 கி.மீ., சுற்றி செல்லும் கிராம மக்கள்

Published On 2023-09-22 15:08 IST   |   Update On 2023-09-22 15:08:00 IST
  • இச்சாலையை உடனடியாக சரி செய்ய வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
  • விழுப்புரம் மாவட்ட வனத்துறை அலுவலர் வரை அனுமதி பெற்று வர வேண்டும் என கூறிவிட்டனர்.

விழுப்புரம்:

மரக்காணம் ஒன்றிய த்திற்கு உட்பட்டது வண்டி ப்பாளையம் மற்றும் ஆத்திகுப்பம் ஊராட்சிகள். இந்த பகுதியை சுற்றிலும் தேவிகுளம், நடுக்குப்பம், ஓமிப்பேர், அடசல், கோடிகப்பம், கிளாம்பாக்கம் உள்பட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இப்பகுதியில் உள்ள பெரும்பாலானோர் விவசாயிகள் ஆவர். இவர்கள் அனுமந்தை, புதுவை, சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டும் என்றால் பக்கிங்காம் கால்வாய் வழியாக வண்டிப்பாளையம் ஆத்திகுப்பம் ஊராட்சி களுக்கு இடைப்பட்ட சாலை வழியாகத்தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இப்பகுதியில் உள்ள சாலை கடந்த 10 ஆண்டுக்கு முன் அமைக்கப்பட்டது. இச்சாலை முற்றிலும் சேதம் அடைந்து விட்டது. இச்சாலையை உடனடியாக சரி செய்ய வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து கடந்த 2 ஆண்டுக்கு முன் இச்சாலையை சரி செய்யவும், பக்கிங்காம் கால்வாயில் பாலம் அமைக்கவும் அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. இதனைத் தொடர்ந்து அப்பணியை செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். அப்போது வனத்துறை சார்பில் இந்த சாலை உள்ள பகுதி தற்பொழுது எங்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் இப்போது இங்கு சாலை அமைக்க கூடாது என தடுத்து நிறுத்தி விட்டனர். மேலும், இங்கு சாலை அமைக்க வேண்டும் என்றால் டெல்லியில் உள்ள வனத்துறை அலுவலகம் முதல் விழுப்புரம் மாவட்ட வனத்துறை அலுவலர் வரை அனுமதி பெற்று வர வேண்டும் என கூறிவிட்டனர். இதன் காரணமாக இச்சாலை அமைக்கும் பணி தடைபட்டது. இந்நிலையில் இந்த தார் சாலை தற்போது முற்றிலும் சேதமடைந்து மண் சாலையாக மாறிவிட்டது. மழை பெய்தால் இந்த மண் சாலை நீரில் மூழ்கிவிடும். இதனால் இந்த சாலை அனைத்து நாட்களிலும் சேரும் சகதியுமாக இருக்கும். இதனால் இந்த சாலையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் சுமார் 10 கிலோமீட்டர் தூரம் சுற்றிக்கொண்டு மரக்காணம் வழியாகத்தான் புதுவை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் அவல நிலை உள்ளது.

பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன் கருதி சேரும் சகதியுமாக காணப்படும் ஆத்திகுப்பம் வண்டிப்பாளையம் தார் சாலையை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News