உள்ளூர் செய்திகள்

ஆதிநாதர்ஆழ்வார் கோவிலில் தேரோட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் வைகாசி திருவிழா தேரோட்டம்

Published On 2023-06-01 09:00 GMT   |   Update On 2023-06-01 09:00 GMT
  • 9-ம் திருவிழாவான இன்று காலை 8 மணிக்கு தங்கத்தேரில் நம்மாழ்வார் எழுந்தருளினார்.
  • நாளை (2-ந்தேதி) தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகின்றது.

தென்திருப்பேரை:

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நவதிருப்பதி தலங்களில் 9- வது தலமான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் வைகாசி திருவிழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தினமும் சுவாமி நம்மாழ்வார் மாலையில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்று வருகிறது. 5-ம் திருவிழாவை முன்னிட்டு சுவாமி பொலிந்து நின்ற பிரான் கருட வாகனத்திலும், சுவாமி நம்மாழ்வார் அன்ன வாகனத்திலும், மதுரகவி ஆழ்வார் தங்க பல்லக்கிலும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்து அருள் பாலித்தனர். அன்றைய தினம் நவதிருப்பதி பெருமாள் மங்களாசாசனம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

தேரோட்டம்

9-ம் திருவிழாவான இன்று காலை 8 மணிக்கு தங்கத்தேரில் நம்மாழ்வார் எழுத்தருளினார். 8.30 மணியளவில் பக்தர்கள் கோவிந்தா, கோபாலா என்ற கர கோஷத்துடன் நான்கு ரத வீதிகளில் தங்கத்தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர். காலை 11 மணி அளவில் தேர் நிலை வந்தடைந்தது. நாளை (2-ந்தேதி) தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகின்றது.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி அஜித், தக்கார் கோவல மணிகண்டன், அலுவலக பணியாளர்கள் ஆகியோர் செய்து இருந்தனர்.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியில் வானமாமலை ராமானுஜ ஜீயர், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பார்த்திபன், ராஜப்பா வெங்கடாச்சாரி உள்பட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆழ்வார்திருநகரி சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் மற்றும் ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு துறை அலுவலர்கள் இசக்கி, ராஜ்குமார் ஆகியோர் செய்து இருந்தனர்.

Tags:    

Similar News