உள்ளூர் செய்திகள்

திண்டுக்கல்லில் தடுப்பூசி செலுத்திய பச்சிளம் குழந்தை திடீர் உயிரிழப்பு

Published On 2022-12-22 11:24 IST   |   Update On 2022-12-22 11:24:00 IST
  • திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று தனது குழந்தைக்கு தடுப்பூசி போட்டு சென்றார்.
  • மாலையில் குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல்:

திண்டுக்கல் பிள்ளையார் பாளையத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி சுகன்யா. இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகன் உள்ளான். இந்நிலையில் சுகன்யாவுக்கு டந்த 45 நாட்களுக்கு முன்பு 2வது ஆண் குழந்தை பிறந்தது. குரு பிரசாத் என அந்த குழந்தைக்கு பெயரிட்டனர்.

இந்த நிலையில் நேற்று காலை இவரது வீட்டுக்கு வந்த அங்கன்வாடி பணியாளர் குழந்தைக்கு போட வேண்டிய தடுப்பூசியை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து போட்டுச் செல்லுமாறு கூறியுள்ளார்.

அதன்படி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று தனது குழந்தைக்கு தடுப்பூசி போட்டு சென்றார். அதன் பிறகு நேற்று மாலையில் குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இருந்தபோதும் தடுப்பூசி போட்டதால் காய்ச்சல் இருக்கலாம் என நினைத்து ஆஸ்பத்திரியில் கொடுத்த மருந்துகளை கொடுத்துள்ளனர்.

இன்று காலை தனது குழந்தைக்கு சுகன்யா தாய்ப்பால் கொடுத்தார். ஆனால் பால் குடித்த சிறிது நேரத்தில் குழந்தையின் வாய் மற்றும் மூக்கில் ரத்தம் வழிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சுகன்யா மற்றும் அவரது கணவர் குழந்தையை தூக்கிக்கொண்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். ஆனால் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதனால் அவர்கள் கதறி அழுதனர். தடுப்பூசி போட்ட பிறகுதான் தனது குழந்தைக்கு காய்ச்சல் உள்ளிட்ட உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும் தற்போது உயிரிழந்து விட்டதாகவும் டாக்டர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எனவே குழந்தை இறப்பில் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் நாங்கள் உடலை வாங்க மாட்டோம் என்று கூறி போராட்டம் நடத்த முயன்றனர். இதனைத் தொடர்ந்து அங்கு வந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தால் அரசு ஆஸ்பத்திரியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News