உள்ளூர் செய்திகள்
உடுமலை அமராவதி அணை.

உடுமலை அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு- பாசனத்திற்கு நாளை தண்ணீர் திறப்பு

Published On 2022-06-25 04:47 GMT   |   Update On 2022-06-25 04:47 GMT
  • பருவமழை தீவிரமடைந்தால் அமராவதி அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
  • அமராவதி அணையில் இருந்து பாசனத்திற்கு ஆற்று மதகு வழியாக வினாடிக்கு, 250 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது.

உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை வாயிலாக திருப்பூர், கரூர் மாவட்டத்தில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

அமராவதி அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில், தென்மேற்கு பருவமழை தாமதமாகி வந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளான கேரள மாநிலம், தலையாறு, மறையூர், சின்னாறு உள்ளிட்ட வனப்பகுதிகளில் பருவமழை துவங்கியுள்ளது. இதனால் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்துள்ளது.

பருவமழை தீவிரமடைந்தால் நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது அமராவதி அணையில் மொத்தமுள்ள, 90 அடியில் 66.97 அடி நீர்மட்டம் உள்ளது.

அணைக்கு வினாடிக்கு 312 கனஅடி நீர்வரத்தும், அணையில் இருந்து பாசனத்திற்கு ஆற்று மதகு வழியாக வினாடிக்கு, 250 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. இந்த நிலையில் குடிநீர், பாசன வசதிக்காக அமராவதி அணையில் இருந்து பிரதான கால்வாய் மதகு வழியாக நாளை முதல் ஜூலை 11-ந்தேதி 571 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட அரசு அனுமதி அளித்து ஆணையிட்டுள்ளது.

இதையடுத்து நாளை அமராவதி அணையில் தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News