25-ந் தேதி உதயநிதி ஸ்டாலின் வருகை: முன்னேற்பாடு பணிகள் குறித்து எம்.எல்.ஏ ஆய்வு
- மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்குதல் நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார்.
- பணிகளை பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான மதியழகன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்திற்கு வருகிற 25-ந் தேதி (திங்கட்கிழமை) தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் வருகை தருகிறார். அன்றைய தினம் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தில் உள்ள தி.மு.க. மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்குதல் நிகழ்ச்சி மற்றும் பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார்.
அதை யொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பிரமாண்ட வரவேற்பு விழா மற்றும் பொற்கிழி வழங்கும் விழா கிருஷ்ண கிரியில் சென்னை சாலையில் உள்ள ஸ்ரீ தேவராஜ் மஹாலில் நடைபெறுகிறது. இதையொட்டி விழா நடைபெறும் இடத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான டி.மதியழகன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது மாவட்ட அவைத்தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ், பொருளாளர் கதிரவன், பொதுக்குழு உறுப்பினர் அஸ்லம், கிழக்கு ஒன்றிய செயலாளர் கோவிந்தன், அமைப்பு சாரா ஓட்டுனர் அணியின் மாவட்ட அமைப்பாளர் கந்திகுப்பம் மாணிக்கம், இளைஞர் அணி துணை அமைப்பாளர் சங்கர், மிட்டப்பள்ளி பிரபு மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.