உள்ளூர் செய்திகள்

தொழிலாளர் நலனுக்காக தி.மு.க. அரசு எப்போதும் பாடுபடும்- உதயநிதி ஸ்டாலின்

Published On 2023-05-01 06:59 GMT   |   Update On 2023-05-01 06:59 GMT
  • ரத்தம் சிந்தி உழைப்பவர்களை நினைவு கூரும் வகையில் மே தினம் கொண்டாடப்படுகிறது.
  • தமிழகத்தில் 1 லட்சத்து 37 ஆயிரம் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 247 கோடி பண பலன்கள் வழங்கப்பட்டுள்ளது.

சேலம்:

தமிழகம் முழுவதும் தி.மு.க. இளைஞரணி புதிய நிர்வாகிகளுக்கான நேர்காணல் மண்டல வாரியாக நடைபெற்று வருகிறது. அதன்படி மண்டலம் 4-ல் உள்ள சேலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கான நேர்காணல் சேலத்தில் இன்று காலை தொடங்கியது. இதில் மாநகர அமைப்பாளர், துணை அமைப்பாளர், பொறுப்புகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான நேர்காணல் சேலம் ரேடிசன் ஓட்டலில் நடைபெற்று வருகிறது.

இதில் தி.மு.க. இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு அவர்களுடன் நேர்காணலை நடத்தி வருகிறார். அப்போது கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட இளைஞரணி நேர்காணல் முதலில் தொடங்கியது. அப்போது நேர்காணலுக்கு வந்த இளைஞர்களிடம் அரசியல் அனுபவம், பொது சேவைகள், கழக அமைப்புகளின் பணியாற்றியது தொடர்பான புகைப்படங்கள், கழக உறுப்பினர் அட்டைகள், வயதை நிரூபிப்பதற்கான சான்றிதழ்களையும் ஆய்வு செய்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அரசியல் குறித்த பல்வேறு கேள்விகளையும் கேட்டறிந்தார். தொடர்ந்து கிருஷ்ணகிரி மேற்கு, தருமபுரி மேற்கு, கிழக்கு, சேலம் மேற்கு, கிழக்கு, மத்திய மாவட்டத்திற்கான நேர்காணல் நடக்கிறது. இதையொட்டி ரேடிசன் ஓட்டல் முன்பு தி.மு.க.வினர் ஏராளமானோர் திரண்டுள்ளனர்.

முன்னதாக சேலம் மெய்யனூர் அரசு போக்குவரத்து கழக டெப்போ முன்பு மே தினத்தையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொ.மு.ச. கொடியை ஏற்றி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ரத்தம் சிந்தி உழைப்பவர்களை நினைவு கூரும் வகையில் மே தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் உங்கள் அனைவருக்கும் இந்த நன்நாளில் வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன். இந்தியாவிலேயே 1923-ம் ஆண்டு முதல் மே தினம் தமிழகத்தில் கொண்டாடப்பட்டது. தொழிலாளர் உயிரை மதிக்கும் இயக்கம் தி.மு.க. இந்தியாவில் முதன் முறையாக விடுப்புடன் சம்பளம், 20 சதவீதம் போனஸ் கொடுத்ததும், கூலி தொழிலாளர்களுக்கு வீடு, கை ரிக்சா ஒழிப்பு, பணிக்கொடை வழங்கல், விபத்து காப்பீட்டு திட்டம் என அனைத்தையும் தந்தது கலைஞர் அரசு. 1990-ம் ஆண்டு நேப்பியர் பூங்காவுக்கு மே தின பூங்கா என கலைஞர் பெயர் சூட்டினார். நான் மே தினத்தில் அங்கு செல்வேன், இன்று உங்களுடன் மே தினம் கொண்டாடுவது சிறப்பு. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அங்கு சென்று மே தின வாழ்த்து சொல்லியுள்ளார்.

தமிழகத்தில் 1 லட்சத்து 37 ஆயிரம் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 247 கோடி பண பலன்கள் வழங்கப்பட்டுள்ளது. 12 மணி நேர வேலை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறுத்தி வைத்திருந்தார். மே தின விழாவான இன்று அந்த சட்டத்தை திரும்ப பெறுவதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார். தி.மு.க. அரசு எப்போதும் தொழிலாளர் நலனுக்கு பாடுபடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர்கள் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., டி.எம்.செல்வகணபதி, எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி., மேயர் ராமச்சந்திரன், தேர்தல் பணிக்குழு செயலாளர் தாமரைக்கண்ணன், உதயநிதி மன்ற மாநில செலலாளர் பாபு, மாவட்ட தலைவர் ராஜ்குமார், செயலாளர் தர்மராஜ், பொருளாளர் நடராஜ், தொழில்நுட்ப அணி டாக்டர் தருண் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News