உள்ளூர் செய்திகள்

குற்ற சம்பவங்களை தடுக்க மாநகர் முழுவதும் 186 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள்

Published On 2023-11-02 08:56 GMT   |   Update On 2023-11-02 08:56 GMT
  • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குற்ற சம்பவங்களை தடுக்க நகர் முழுவதும் 186 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன
  • போலீஸ் கமிசனர் காமினி தகவல்

திருச்சி,

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சி தெப்பக்குளம் பகுதியில் மாநகர காவல் துறை சார்பில் காவல் உதவி மையத்தினை, மாநகர போலீஸ் கமிசனர் காமினி இன்று திறந்துவைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

திருச்சி மாநகர பகுதிகளில் இலகுரக மற்றும் கனரக வாகனங்கள் பகல் நேரங்களில் சரக்குகள் ஏற்றுவது மற்றும் இறக்குவதை தவிர்த்து, இரவு 11 மணிக்கு மேல் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படு உள்ளது. தற்காலிக சாலையோர கடைகளை மாநகராட்சி அதிகாரிகளுடன் கலந்தாய்வு செய்து முறைப்படுத்தி போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுமக்களின் பாதுகாப்பை கருதி அவர்கள் தங்களது உடைமைகளையும், குழந்தைகளையும் கவனமாக பார்த்து கொள்ள வேண்டும். சந்தேகப்படும் படியான நபர்கள் பற்றிய தகவல்களை தெரிவிக்கவும், அது சம்மந்தமாக புகார் கொடுக்கவும், என்.எஸ்.பி. ரோடு தெப்பக்குளம் அருகில் தற்காலிக காவல் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், சத்திரம் பேருந்து நிலையம் மற்றும் மத்திய பேருந்து நிலையங்களில் பொது அறிவிப்பு மையம் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு காவல் ஆளினர்கள் மூலம் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் தொடர்ந்து கண்காணித்து எவ்வித குற்றச் சம்பவம் நிகழாவண்ணம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

என்.எஸ்.பி.ரோடு பெரியகடைவீதி சந்திப்பு, மலைகோட்டை வாசல், மெயின்கார்டு கேட் நந்திகோவில் தெரு சந்திப்பு, சிங்காரதோப்பு பூம்புகார் ஜங்சன் அருகில், பெரியகடைவீதி கரீம்

ஸ்டோர் அருகில், பெரியகடை வீதி ஆகிய 7 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் நிறுவப்பட்டு பைனாகுலர் மூலம் கண்காணிக்க காவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தெப்பக்குளம் என்.எஸ்.பி. ரோடு புறக்ககாவல் நிலையம் மற்றும் சத்திரம் பேருந்து நிலையத்தில் அதிநவீன சுழலும் டோன் கேமராக்கள் இரண்டும், காந்திமார்க்கெட் ஆர்ச், பெரியகடை வீதி, சூப்பர் பஜார், ஜாபர்ஷா தெரு, மதுரை ரோடு, நந்திகோயில் தெரு, மேலப்புலி வார்டுரோடு, என்.எஸ்.பி. ரோடு, சத்திரம் பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் என மொத்தம் 186 சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுஉள்ளது .

இவற்றை என்.எஸ்.பி. ரோடு ரகுநாத் சந்திப்பில் மானிட்டர்கள் அமைக்கப்பட்டு அதை இயக்குவதற்கு தனித்தனியே காவலர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். மேலும் தீபாவளி பண்டிகையின்போது அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாவண்ணம் திருச்சி மாநகரில் உள்ள நவீன காவல் கட்டுப்பாட்டு அறை மூலமாக நாள் முழுவதும் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News