உள்ளூர் செய்திகள்

புதிய உலகை படைக்க மாணவர்கள் உலகளாவிய அறிவை பெற வேண்டும் - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு

Published On 2022-08-17 09:48 GMT   |   Update On 2022-08-17 09:49 GMT
  • ஒவ்வொரு பள்ளிகளும் உள்ள மாணவர்கள் 6 முதல் எட்டாம் வகுப்பு வரையிலும், 9 முதல் பத்தாம் வகுப்பு வரையிலும், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் தனி பிரிவாகவும் என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளனர்.
  • அனைத்து மாணவர்களுக்கும் நூலகத்தில் உள்ள ஒரு நூல் வாரம் ஒன்றுக்கு வழங்கப்படும். நீங்கள் இதனை வீட்டுக்கு எடுத்துக்கொண்டு சென்று படித்து முடித்தவுடன் நூலகத்திற்கு திருப்பி தந்து விட வேண்டும்.

திருச்சி :

பள்ளி மாணவர்கள் தங்களது பாட இடைவேளைகளை பயன்படுத்தி அவர்களின் வாசிப்பு திறனையும் படைப்புத்திறனையும் வளர்த்துக்கொள்ள பள்ளிக் கல்வித் துறை சார்பில் பள்ளிகளில் வாசிப்பு இயக்க தொடக்க விழா நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டத்தில் பள்ளிகளில் வாசிப்பு இயக்க தொடக்க விழா திருச்சி அரசு சையது முர்துஷா மேல்நிலைப் பள்ளியில் இன்று நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் பிரதீப் குமார் தலைமை தாங்கினார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்து பேசினார் அப்போது அவர் கூறியதாவது;-

இந்த திட்டத்தின் படி ஒவ்வொரு பள்ளிகளும் உள்ள மாணவர்கள் 6 முதல் எட்டாம் வகுப்பு வரையிலும், 9 முதல் பத்தாம் வகுப்பு வரையிலும், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் தனி பிரிவாகவும் என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளனர். அனைத்து மாணவர்களுக்கும் நூலகத்தில் உள்ள ஒரு நூல் வாரம் ஒன்றுக்கு வழங்கப்படும். நீங்கள் இதனை வீட்டுக்கு எடுத்துக்கொண்டு சென்று படித்து முடித்தவுடன் நூலகத்திற்கு திருப்பி தந்து விட வேண்டும். பின்னர் படித்த நூல் குறித்து விமர்சனம் எழுதலாம் ஓவியம் வரையலாம் நாடகமும் நடத்தலாம் அது மட்டும் அல்லாமல் நூல் அறிமுகம் புத்தக ஒப்பீடு கதாபாத்திரங்களை மதிப்பீடு செய்தல். ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தல் என மாணவர்களின் படைப்புகள் பள்ளிகளில் சேகரிக்கப்படும்.

இதில் மாவட்ட அளவில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கெடுக்கலாம். அந்த வகையில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மூன்று பேர் என்கிற வகையில் 114 பேர் தேர்வு செய்யப்பட்டு சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறவிருக்கும் முகாமில் பங்கேற்பார்கள்.

இதில் தலைசிறந்த பேச்சாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் உடன் அந்த குழந்தைகள் உரையாடும் வாய்ப்பு ஏற்படுத்தப்படும்.

அதில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் அறிவுப்பயணம் என்ற பெயரில் வெளிநாடு சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். அங்கு உலக புகழ் பெற்ற நூலகங்கள் ஆவண காப்பகங்களை பார்வையிடும் வாய்ப்பு கிடைக்கும்.

கவுன்சிலிங் தேவையில்லை

தற்போது தினமும் நூலகத்துக்குச் சென்று புத்தகத்தை படிப்பதற்காக பாட நேரங்களில் 20 நிமிடம் மாணவர்களுக்கு ஒதுக்கி தரப்பட்டுள்ளது.

இப்போது உள்ள மாணவ மாணவிகளுக்கு கவுன்சிலிங் அளிக்கப்பட வேண்டும் என்று சொல்கிறார்கள். என்னைப் பொருத்தமட்டில் நூலகத்தில் இருந்து ஒரு புத்தகத்தை நீங்கள் எடுத்துச் சென்று அதை உள்வாங்கினாலே சிறந்த கவுன்சிலிங் ஆக இருக்கும். புத்தகம் படிப்பதால் மன மாற்றம் ஏற்படும்.

புதிய உலகை படைப்பதற்கு மாணவர்கள் உலக அறிவை பெற வேண்டும். ஒரு புத்தகத்தை படித்து உள்வாங்கி அதை விமர்சனமாக எழுதும் போது நீங்களும் படைப்பாளியாக மாற முடியும். மாணவர்களையும் படைப்பாளிகளாக மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் தான் முதலமைச்சர் இந்த திட்டத்தை கொண்டு வந்திருக்கிறார். இந்த வாய்ப்பினை மாணவர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News