உள்ளூர் செய்திகள்

திருச்சி பைந்தமிழ் இயக்கம் சார்பில் ஆய்வரங்கம் நிகழ்ச்சி

Published On 2022-07-05 09:46 GMT   |   Update On 2022-07-05 09:46 GMT
  • திருச்சியில் பைந்தமிழ் இயக்கம் சார்பில் சிறப்பு ஆய்வரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது
  • இயேசு காவியம் என்ற நூலைப் படைத்தவர். தன்னுடைய வாழ்வில் நேர்ந்த நிகழ்வுகளைப் பாவடிவில் இயற்றித் திரைப்படங்களிலே இசையோடு காற்றில் கைக்கோத்து உலவச் செய்த பெருமகன் என்று பாராட்டி கண்ணதாசனைப் புகழ்ந்து உரைத்தார்

திருச்சி:

திருச்சி பைந்தமிழ் இயக்கத்தின் 73-வது பாப்பொழிவு ஆய்வரங்க நிகழ்வு அரசு சையது முர்துசா மேனிலைப்பள்ளியில் பைந்தமிழியகத்தின் இயக்குநர் புலவர் பழ.தமிழாளன் தலைமையில் நடைபெற்றது.

மாணவர் அரங்கத்தில் முனைவர் நதியா அயோத்திதாசரின் அரும்பணிகள் பற்றியும், கிருட்டினவேணி மார்சல் நேசமணியாரின் தென்னெல்லைப் போராட்டம் பற்றியும் உரையாற்றினர்.

பின்னர் நிகழ்வுற்ற பாவரங்கத்தில் காலத்தை வென்ற கண்ணதாசன் என்ற பொருளில் துணை இயக்குநர் பாவலர் சொ.வேல்முருகன், பன்மொழிப்புலவர் அப்பாத்துரையார் பற்றி பாவலர் சந்திரசேகரன், பன்னாட்டுத் தமிழுறவு மன்றப் பெருங்கவிக்கோ அளித்த (புலவர் பழ.தமிழாளன்) பீடுதமிழ்ப் புலவர் கோ விருதினைப் பாராட்டும் வாழ்த்துக் கவிதையினை பாவலர் செல்வராசன் ஆகியமூவரும் வழங்கினர்.

இறுதியாக ஆய்வரங்கத்தில் முனைவர் கலைமணி திரையிசை தென்றல் கண்ணதாசன் என்னும் பொருளில் உரையாற்றும் பொழுது, கல்லூரியிலே கால் பதிக்காத கண்ணதாசன் காலத்தை வெல்லும் கவிதைகளைப் படைத்துள்ளார்.

4000 பாடல்களுக்குமேல் பல்வேறு பொருளிலும் 5000 பாடல்களுக்கு மேல் திரையிசையிலும் முடி சூடா மன்னனாகப் பவனி வந்தவர்.

இயேசு காவியம் என்ற நூலைப் படைத்தவர். தன்னுடைய வாழ்வில் நேர்ந்த நிகழ்வுகளைப் பாவடிவில் இயற்றித் திரைப்படங்களிலே இசையோடு காற்றில் கைக்கோத்து உலவச் செய்த பெருமகன் என்று பாராட்டி கண்ணதாசனைப் புகழ்ந்து உரைத்தார்.

அவரின் பாடல்களை இசைக்கருவி இல்லா நிலையிலும் இசையோடு பாடிக் கலந்து கொண்டவர்களை மகிழச் செய்தார்.

நிறைவில் செவல்பட்டி ப.சி.சு.மணி நன்றி கூறினார்.பாவலர் சொ.வேல்முருகன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

இதில் தமிழ்ப்பற்றாளர் கேசவன், பாவலர் மாரிமுத்து, தலைமை ஆசிரியை ஐடா ராசகுமாரி, பாண்டுரங்கன், சோசப், தமிழினியன், மகேந்திரன், மணி உட்படத் தமிழ்ப்பற்றாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News