ஸ்ரீரங்கம் காட்டழகிய சிங்கர்பெருமாள் கோவில் சகஸ்ர தீப மகோத்சவம்
- ஸ்ரீரங்கம் காட்டழகிய சிங்கர்பெருமாள் கோவில் சகஸ்ர தீப மகோத்சவம் நடைபெற்றது
- 21-ம் ஆண்டு சகஸ்ரதீப வழிபாடு நடந்தது.
திருச்சி
ஸ்ரீரங்கம் காட்டழகிய சிங்கர் கோவிலில் சகஸ்ரதீபம் மற்றும் சிறப்பு கூட்டு வழிபாடு நடைபெற்றது.
கார்த்திகை மாதம் என்றாலே விளக்குகள் ஏற்றி வழிபடுவது ஐதீகம். குறிப்பாக வைணவக் கோவில்களில் இம்மாதத்தில் ஆயிரக்கணக்கான விளக்குகள் ஏற்றி வழிபடும் சகஸ்ரதீப வழிபாடு நடைபெறும். இதனால் மிகுந்த நற்பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அந்த அடிப்படையில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உப கோவிலான காட்டழகிய சிங்கர் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் சன்னதியில் 21-ம் ஆண்டு சகஸ்ரதீப வழிபாடு நடந்தது. இந்த விளக்கேற்றும் நிகழ்வுகளை ஸ்ரீரங்கம் நகர நல சங்கத்தின் மக்கள் செய்தி தொடர்பாளர் மேஜர் டோனர் ரோட்டேரியன் டாக்டர் கே.சீனிவாசன் விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
அதன் தொடர்ச்சியாக கோவில் மண்டபங்கள், பிரகாரங்கள், நந்தவனம் உள்பட கோவில் வாசல் முதல் மூலஸ்தானம் வரை ஆயிரக்கணக்கான விளக்குகளை பக்தர்கள் ஏற்றி வைத்து வழிபட்டனர். இதனால் கோவில் வளாகம் முழுவதும் விளக்கொளியில் ஜொலித்தது.
இதையொட்டி காட்டழகிய சிங்கர் பெருமாள் கோவில் ஆஸ்தான நாதஸ்வர வித்துவான் திருக்கண்ணபுரம் டாக்டர் டி.எஸ்.கே.சவுரிராஜன் குழுவினரின் நாதஸ்வர இசை நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் திருமஞ்சனம் ஆன்மீக சொற்பொழிவு, நாதஸ்வர இசை நிகழ்ச்சி, சங்கீத ஆராதனை மற்றும் நாம சங்கீர்த்தனம் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை மாருதி ராமசாமி செய்திருந்தார்.