உள்ளூர் செய்திகள்

திருச்சியில் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் - தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மனு

Published On 2022-10-14 09:38 GMT   |   Update On 2022-10-14 09:38 GMT
  • திருச்சி மாநகர பகுதிகளில் (பி.எல்.ஓ.) வாக்குச்சாவடி நிலை அலுவலர்களாக பணியாற்றும் ஆசிரியர்களை இப்பணியிலிருந்து படிப்படியாக விடுவிக்க வேண்டும்.
  • திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கும் ஸ்மார்ட் கிளாஸ் வசதி மற்றும் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் செய்து தர வேண்டும் .

திருச்சி,

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் திருச்சி மாவட்ட கிளையின் சார்பாக திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகனை, மாநில பொருளாளர் நீலகண்டன் தலைமையில் நிர்வாகிகள் சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

திருச்சி மாநகர பகுதிகளில் (பி.எல்.ஓ.) வாக்குச்சாவடி நிலை அலுவலர்களாக பணியாற்றும் ஆசிரியர்களை இப்பணியிலிருந்து படிப்படியாக விடுவிக்க வேண்டும். மேலும் இப்பணியில் ஆசிரியர்களை மரியாதை மற்றும் கண்ணியத்துடன் மாநகராட்சி அலுவலர்கள் நடத்துவது இல்லை என்ற மனக்குமுறல் இருக்கிறது.

அதேபோன்று வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு முறையான உத்தரவுகளை சரியான நேரத்தில், போதிய கால அவகாசத்துடன் வழங்க வேண்டும். திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கும் ஸ்மார்ட் கிளாஸ் வசதி மற்றும் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் செய்து தர வேண்டும் .

சுப்ரமணியபுரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் அமைக்க இருப்பதாக உள்ள ஆரம்ப சுகாதார மருத்துவமனையை வேறு இடத்தில் அமைக்க வேண்டும். மேலும் திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கு தூய்மை பணிகளை மேற்கொள்வதற்கு 100 நாள் வேலை திட்டத்தின் மூலம் பணியாளர்களை நியமித்து உதவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுவின் நகல் மாநகராட்சி ஆணையருக்கும் வழங்கப்பட்டது. இச்சந்திப்பின் போது கூட்டணியின் மாநகரத் தலைவர் ரெக்ஸ், மாநகரச் செயலாளர் அமல் சேசுராஜ், மாவட்டத் துணைச் செயலாளர் பெர்ஜித் ராஜன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் ஹக்கீம் அலி ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News