ஜவ்வரிசி தொழிற்சாலை கிட்டங்கிக்கு சீீல்- உணவுப்பொருள் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
- ஜவ்வரிசி தொழிற்சாலை கிட்டங்கிக்கு சீீல் வைக்கப்பட்டது
- தடை செய்யப்பட்ட இரசாயனம் ஹைப்போ சொலூசன் பயன்படுத்தியது கண்டறியப்பட்டது
உப்பிலியபுரம் :
உப்பிலியபுரம் பகுதிகளில் திருச்சி மாவட்ட உணவுப் பாதுகாப்பு துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். திருச்சி மாவட்ட உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை நியமன அலுவலர் ரமேஷ்பாபு தலைமையில், உப்பிலியபுரத்தை அடுத்துள்ள தளுகை ஊராட்சி வெள்ளாளப்பட்டி பகுதியில் இயங்கி வரும் தனியாருக்கு சொந்தமான ஜவ்வரிசி தொழிற்சாலையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது உணவு பொருள் தயாரிக்க, தடை செய்யப்பட்ட இரசாயனம் ஹைப்போ சொலூசன் பயன்படுத்தியது கண்டறியப்பட்டு சுமார் 3725 லிட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அங்கு தயார் செய்யப்பட்டு , பொட்டலமிடப்பட்ட ஜவ்வரிசி 5445 கிலோ உணவு பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. உணவு மாதிரி சேகரிக்கப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006ன் படி பிணைபத்திரம் பெறப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட இரசாயணம் மற்றும் உணவு பொருள்களை தொழிற்சாலையிலேயே உள்ள கிட்டங்கில் வைத்து சீலிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மேற்கண்ட தொழிற்சாலையில் வெளியேறும் இரசாயணக் கழிவுகள் அருகில் உள்ள வாய்க்காலில் கலப்பதை முன்னிட்டு மேல் நடவடிக்கைகாக மாவட்ட மாசுகட்டுப்பாட்டு வாரியத்திற்கு தெரியபடுத்தும் வகையில் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்கு கோப்பு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலையில் சேகரிக்கப்பட்ட உணவு மாதிரிகளின் பகுப்பாய்வு அறிக்கையின் அடிப்படையில் உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய சட்டம் 2006ன் படி மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என நியமன அலுவலர் ரமேஷ்பாபு தெரிவித்துள்ளார். மேலும் பொதுமக்கள் பாதுகாப்பற்ற முறையில் உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் குறித்து புகார் அளிக்க விரும்பினால் 9944959595, 9585959595 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என்றும் அவ்வாறு புகார் அளிக்கும் பொதுமக்களின் விபரம் ரகசியம் காக்கப்பட்டு அந்த கடைகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.