உள்ளூர் செய்திகள்

திருச்சியில் ஆன்லைன் மோசடி கும்பலிடம் ரூ.8 லட்சத்தை இழந்த டாக்டர்

Published On 2022-09-04 15:10 IST   |   Update On 2022-09-04 15:10:00 IST
  • சஞ்சீவி பெருமாள் (வயது 68). ஓய்வு பெற்ற அரசு ஆஸ்பத்திரி டாக்டரான இவர் சமீபத்தில் நாப்தால் என்ற நிறுவனத்தில் ஆன்லைன் மூலம் புக்கிங் செய்து ஒரு பொருளை வாங்கினார்.
  • எதிர் முனையில் பேசிய நபர் காரை எடுத்துச் செல்ல வேண்டும் என்றால் ஜி.எஸ்.டி. வரி, ரிசர்வ் வங்கியின் அனுமதி பெற வேண்டும். அதற்கு தாங்கள் பணம் செலுத்த வேண்டும் எனக் கூறியுள்ளார்.

திருச்சி,

திருச்சியை அடுத்த திருவெறும்பூர் டி.நகர் முதல் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சீவி பெருமாள் (வயது 68). ஓய்வு பெற்ற அரசு ஆஸ்பத்திரி டாக்டரான இவர் சமீபத்தில் நாப்தால் என்ற நிறுவனத்தில் ஆன்லைன் மூலம் புக்கிங் செய்து ஒரு பொருளை வாங்கினார்.

இந்த நிலையில் அடுத்த ஒருசில தினங்களில் அந்த நிறுவனத்தில் இருந்து சஞ்சீவி பெருமாள் பெயருக்கு ஒரு கூரியர் தபால் வந்தது. அதனைப் பிரித்துப் பார்த்தபோது உங்களுக்கு மகேந்திரா கார் பம்பர் பரிசு விழுந்துள்ளது. அதனைப் பெற்றுச் செல்வதற்கு கீழ்க்கண்ட மொபைல் நம்பரை தொடர்பு கொள்ளுமாறு ஒரு செல்போன் எண் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதையடுத்து சஞ்சீவி பெருமாள் உற்சாகம் அடைந்தார். இதனை உண்மை என நம்பிய சஞ்சீவி உடனடியாக அந்த மொபைல் நம்பருக்கு தொடர்பு கொண்டு பேசினார். எதிர் முனையில் பேசிய நபர் காரை எடுத்துச் செல்ல வேண்டும் என்றால் ஜி.எஸ்.டி. வரி, ரிசர்வ் வங்கியின் அனுமதி பெற வேண்டும். அதற்கு தாங்கள் பணம் செலுத்த வேண்டும் எனக் கூறியுள்ளார்.

அவர்கள் கூறிய அறிவுரைகளின்படி பல்வேறு தவணைகளாக ரூ.8 லட்சத்து 34 ஆயிரத்து 621 பணத்தை அந்த நபர் கூறிய வங்கி கணக்குக்கு அனுப்பினார். பின்னர் அடுத்த நாள் அந்த மொபைல் எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது. பலமுறை முயற்சித்தும் தொடர்பு கொள்ள இயலவில்லை. அதன் பின்னரே தான் ஏமாற்றப்பட்டதை சஞ்சீவிபெருமாள் உணர்ந்தார்.

அதைத்தொடர்ந்து அவர் திருச்சி புறநகர் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அன்புச்செழியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் வட மாநில ஆன்லைன் மோசடி கும்பலிடம் டாக்டர் சிக்கி பணத்தை இழந்து இருப்பது தெரிய வந்தது. அவர்களை பிடிக்க நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. நாள்தோறும் பல்வேறு ஆன்லைன் மோசடிகள் குறித்த தகவல்கள் வந்துகொண்டிருந்த போதும் ஏமாறுபவர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. போதிய விழிப்புணர்வு தேவை என்று சைபர் கிரைம் போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News