சிங்கபெருமாள் கோவிலில் ரெயில் மோதி காதல் ஜோடி பலி- தற்கொலை செய்தனரா?
- காதல் ஜோடி அவ்வழியே சென்ற ரெயில் மோதியதில் இறந்து இருப்பது தெரிய வந்துள்ளது.
- ரெயில் மோதி காதல் ஜோடி பலியான சம்பவம் அவர்களது நண்பர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வண்டலூர்:
கடலூரை சேர்ந்தவர் அலெக்ஸ் (வயது24). கபடி வீரரான இவர் மறைமலை நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அவர் சிங்க பெருமாள் கோவிலை அடுத்த பேர்ணாம்பூர் பகுதியில் நண்பர்களுடன் தங்கி பணிக்கு சென்றார்.
இவருக்கும் உடன் வேலைபார்த்த தூத்துக்குடியை சேர்ந்த ஷெர்லினுக்கும்(20) பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இது காதலாக மாறியது. இருவரும் வேலை முடிந்து செல்லும்போது இரவு நேரத்தில் சிங்கபெருமாள்கோவில் ரெயில்வே பாதை அருகே நின்று பேசுவது வழக்கம்.
இந்த நிலையில் இன்று காலை காதல் ஜோடியான அலெக்ஸ் மற்றும் ஷெர்லின் ஆகியோர் சிங்கபெருமாள் கோவில் ரெயில்வே பாதை அருகே உடல் சிதறிய நிலையில் பிணமாக கிடந்தனர்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவ்வழியே சென்றவர்கள் தாம்பரம் ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் விரைந்து வந்து 2 பேரின் உடல்களையும் மீட்டு பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காதல் ஜோடி அவ்வழியே சென்ற ரெயில் மோதியதில் இறந்து இருப்பது தெரிய வந்துள்ளது.
அவர்கள் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்தனரா? அல்லது தண்டவாளம் அருகே நின்று பேசிக்கொண்டு இருந்தபோது அவ்வழியே சென்ற ரெயில் மோதியில் இறந்தனரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இது தொடர்பாக அவர்கள் பயன்படுத்திய செல்போன்களை போலீசார் ஆய்வு செய்து அவர்களது நண்பர்களிடமும் விசாரித்து வருகின்றனர். ரெயில் மோதி காதல் ஜோடி பலியான சம்பவம் அவர்களது நண்பர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.