உள்ளூர் செய்திகள்

தொடர் விடுமுறையால் கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள் ஏரியில் ஆனந்தமாக படகு சவாரி செய்த காட்சி.

கொடைக்கானலில் தொடர் விடுமுறையால் சுற்றுலா பயணிகள் குதூகலம்

Published On 2022-10-25 04:46 GMT   |   Update On 2022-10-25 04:46 GMT
  • எதிர்பாராத சுற்றுலா பயணிகளின் வருகையால் சிறு குறு வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
  • பல முக்கிய இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

கொடைக்கானல்:

கொடைக்கானலில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக இடைவிடாத கன மழை கொட்டித் தீர்த்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியதோடு வியாபாரிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். சுற்றுலா பயணிகளின் வருகையும் குறைந்ததாலும் வழக்கமாக தீபாவளி பொருட்கள் வாங்க கூட மக்கள் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டதாலும் பெரும்பாலான கடைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

இந்நிலையில் கடந்த 2 நாட்களாக மழையின் தீவிரம் படிப்படியாக குறைந்தது. நேற்று மழை இல்லாத போதும் இதமான சீதோஷ்ணம் நிலவியது. வார இறுதிநாள் மற்றும் தீபாவளி விடுமுறைக்காக சுற்றுலாப்பயணிகள் அதிக அளவில் குவிந்தனர்.

இதனால் கொடைக்கானலில் வெறிச்சோடி காணப்பட்ட அனைத்து சுற்றுலா இடங்களிலும் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. குறிப்பாக பிரையண்ட் பூங்கா, ஏரிச்சாலைப்பகுதிகளில் அதிக அளவில் சுற்றுலாப்பயணிகள் குவிந்தனர்.

அங்கு சைக்கிள் சவாரி, குதிரை சவாரி, படகு சவாரி செய்து உற்சாகம் அடைந்தனர். எதிர்பாராத சுற்றுலா பயணிகளின் வருகையால் சிறு குறு வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

மேலும் மழையும் குறைந்ததால் மக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியேறி பண்டிகைக்கு தேவையான பொருட்களை வாங்க குவிந்தனர். இதனால் வியாபாரம் களைகட்டியது. பல முக்கிய இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

Tags:    

Similar News