உள்ளூர் செய்திகள்

பயிர்களை காப்பீடு செய்ய வேளாண் அதிகாரி அறிவுறுத்தல்

Published On 2022-11-23 13:28 IST   |   Update On 2022-11-23 13:28:00 IST
  • பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் 2022-23-ன் கீழ் குத்தகைதாரர் உள்ளிட்ட அனைத்து விவசாயிகளும் பயன்பெறலாம்.
  • பயிர்களையும் மிகக்குறைந்த பிரீமியத்தில் காப்பீடு செய்து அதிகபட்ச காப்பீட்டுத் தொகையை விவசாயிகள் பெறலாம்.

பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்டம் கபிலர்மலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராதாமணி வெளி–யிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் 2022-23-ன் கீழ் குத்தகைதாரர் உள்ளிட்ட அனைத்து விவசாயிகளும் பயன்பெறலாம். நெல், சோளம், மக்காச்சோளம், நிலக்கடலை, கரும்பு, மரவள்ளி உள்ளிட்ட அனைத்து பயிர்களையும் மிகக்குறைந்த பிரீமியத்தில் காப்பீடு செய்து அதிகபட்ச காப்பீட்டுத் தொகையை விவசாயிகள் பெறலாம்.

விவசாயிகள் முன்மொழிவுப்படிவம், விண்ணப்பப்படிவம், பயிர் சாகுபடி அடங்கல் அறிக்கை, ஆதார் அட்டை நகல் மற்றும் குறைந்தபட்ச இருப்பு வைத்துள்ள வங்கிக்கணக்கு புத்தக முதல் பக்க நகல் ஆகிய ஆவணங்களுடன் அருகில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் அல்லது அரசு பொது சேவை மையங்கள் ஆகிய இடங்களில் கரும்பு மற்றும் தோட்டக்கலைப் பயிர்களுக்கு 5 சதவீதம் பிரிமியமும், இதர குறுகிய காலப் பயிர்களுக்கு 1.5 சதவீதம் பிரிமியமும் செலுத்தி பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம்.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு விவசாயிகள் அருகில் உள்ள கபிலர்மலை வட்டார வேளாண்மை-உழவர் நலத்துறை விரிவாக்க அலுவலகத்தை அணுகலாம். எனவே கபிலர்மலை வட்டார விவசாயிகள், நடப்பு 2022-23-ம் ஆண்டு ரபி பருவத்தில் அரசால் அறிவிக்கை செய்யப்பட்ட கிராமங்களில் உள்ள தங்களது பயிர்களை காப்பீடு செய்து பயனடையலாம்.

இவ்வாறு அதில் அவர் தெரிவித்து உள்ளார். 

Tags:    

Similar News